மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை குறிக்கும். இந்த அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து படையலிட்டு வழிபாடு செய்வார்கள். வடை, பாயசத்தோடு சைவ உணவுகள் சமைத்து முன்னோர்களுக்கு படைப்பார்கள். வடை செய்யும் பொழுது இந்த முறை இப்படி மசால் வடை செய்து பாருங்கள்.
ஆடி அமாவாசை அன்று வடை, பாயசம் இப்படி செய்து பாருங்கள்…!
மசால் வடை செய்வதற்கு இரண்டு கப் கடலைப்பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பு நன்றாக ஊற வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் 5 வர மிளகாய், அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை அரைத்துக் கொள்ளவும். ஒரு சுற்று சுற்றி அரைத்ததும் இதனுடன் ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதற்கு அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும்.
மாவை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். மை போல அரைத்து விடக்கூடாது. இப்பொழுது அரைத்து எடுத்த கடலை பருப்புடன் 150 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் இதனுடன் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து இவை அனைத்தையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். பிசைந்து வைத்த மாவில் ஒரு சிறிய பகுதியை எடுத்து உருண்டையாக உருட்டி வடை போல தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு திருப்பி விட்டு இரு பக்கமும் நன்கு வேக விட வேண்டும். இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கலாம்.
அவ்வளவுதான் மொறுமொறுப்பான மசாலா வடை தயாராகி விட்டது!