அட…‌! கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா..! இனி இட்லி தோசைக்கு அடிக்கடி செய்ய அருமையான ரெசிபி..

கும்பகோணம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கோவில்கள் தான். கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நவகிரகங்களின் திருத்தலங்கள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல கும்பகோணத்திற்கு உள்ள மற்றொரு சிறப்பு பில்டர் காபி. கும்பகோணம் காபி என்றால் பிடிக்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம். இது மட்டும் தான் கும்பகோணத்திற்கு சிறப்பா என்று கேட்டால் இல்லை. கும்பகோணத்தில் உள்ள மற்றொரு சிறப்பான ரெசிபி தான் கடப்பா. கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இந்த கடப்பா மிகவும் பிரபலமான ஒரு சைட் டிஷ்.

இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த கடப்பாவை சுவைக்க வேண்டும் என்றால் நீங்கள் கும்பகோணத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கும்பகோணத்தில் கிடைக்கும் அதே சுவையில் அட்டகாசமான கடப்பாவை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் சுவையான கடப்பா சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற சத்தான முள்ளங்கி சட்னி…!

இந்த கடப்பா சட்னி செய்வதற்கு ஒரு குக்கரில் அரை கப் அளவு பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். பாசிப்பருப்பு சிவக்கும் வரை வறுத்து விடக்கூடாது. வாசம் வரும் வரை மட்டும் வறுத்தால் போதுமானது. இதனுடன் இரண்டரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் அளவிற்கு குறைவாக மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூன்று உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோலுடன் பாதியாக நறுக்கி இதனுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கை மிகவும் சிறிய துண்டாக நறுக்கி அதனை பருப்போடு வேக வைத்தால் சீக்கிரம் வெந்து குழைந்து விடும். எனவே பாதியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். காரத்திற்கு 5 பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்பொழுது குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வைக்கவும். விசில் வந்து அடங்கிய பிறகு வெந்த உருளைக்கிழங்கை மட்டும் தனியாக எடுத்து விடவும். இதனை தோல் நீக்கி சிறிய துண்டாக நறுக்கிக் கொள்ளலாம். பருப்பு மற்றும் பச்சை மிளகாயை ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை, ஒன்றரை டீஸ்பூன் சோம்பு, 5 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, மூன்று பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, நான்கு கிராம்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். சோம்பு நன்கு பொரிந்ததும் இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் அதிகம் சிவந்து விடாமல் வெந்து வரும் வரை வதக்கினால் போதும்.

வெங்காயத்தை சேர்க்கும் பொழுதே இதற்கு தேவையான அளவு உப்பில் பாதியை சேர்த்துக் கொள்ளலாம். அப்பொழுது வெங்காயம் சீக்கிரம் வெந்துவிடும். சிறிதளவு கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி விடலாம். இப்பொழுது வெங்காயம் நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மென்மையாகி வரும் வரை வதக்கி விட வேண்டும்.

தக்காளி மென்மையாக வெந்ததும் நாம் ஏற்கனவே வேக வைத்து மசித்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் சேர்த்து நான்கரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

இனி சட்னி செய்ய அதிக நேரம் வேண்டாம்.. ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பரான சட்னி ரெசிபி..!

இந்த கடப்பா கொதிக்க கொதிக்க நன்கு கெட்டியாகிவிடும். எனவே தண்ணீர் விடும் பொழுதே தேவையான அளவு பார்த்து ஊற்றவும். கொதித்த பிறகு தண்ணீர் சேர்க்கக் கூடாது. இதனை மூடி போட்டு 15 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து சேர்த்து கொள்ளவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி இறக்கி விடலாம்.

Exit mobile version