கோவில்பட்டி கடலை மிட்டாய் ஸ்டைலில் சுலபமாக கடலை மிட்டாய் வீட்டிலேயே செய்யலாம்…!

கடலை மிட்டாய் என்றாலே பலருக்கும் கோவில்பட்டி தான் ஞாபகம் வரும். கோவில்பட்டியில் கிடைக்கும் கடலை மிட்டாய் உலகெங்கும் மிகவும் பிரபலமானது. பொதுவாகவே கடலை மிட்டாய் ஒரு நல்ல ஸ்னாக்ஸ் வகை ஆகும். குழந்தைகளுக்கு நிறமூட்டப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட மிட்டாய் வகைகளை வாங்கிக் கொடுப்பதை விட உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கடலை மிட்டாயை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது அதே சமயம் நல்ல ஆரோக்கியம் உடலுக்கு கிடைக்கும். வாருங்கள் சுவையான கடலை மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த வேர்க்கடலை சாதம்…!

கடலை மிட்டாய் செய்ய முதலில் ஒரு கப் அளவு பச்சைக் கடலையை எடுத்துக் கொள்ளவும். வாணலியை சூடு செய்து அதில் இந்த கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பத்திலிருந்து 15 நிமிடங்கள் வரை நன்றாக வறுக்க வேண்டும். கடலை நன்றாக வறுபட்டு அதில் உள்ள தோல்கள் கழன்று வரும் வரை இதனை வறுத்துக் கொண்டே இருக்கவும்.

கடலை நன்றாக வறுபட்டதும் இதனை ஒரு தட்டில் தனியாக கொட்டி வைத்து விடலாம். கடலை சூடு முழுவதும் குறைந்து நன்கு ஆறியதும் அதில் உள்ள தோலை நீக்கி விடவும். தோல் நீக்கிய பிறகு கடலையை ஒன்று இரண்டாக உடைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயில் ஒரு கப் அளவு வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். துருவிய வெல்லமாக சேர்க்கவும். வெல்லத்தை சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் அளவு நெய், 2 மேசை கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து பாகாக வந்ததும் அதில் ஒரு சிறு பகுதியை கரண்டியில் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைத்து எடுத்த வெல்லத்தை அதில் சேர்த்து உருட்டி பார்த்தால் நன்கு உருண்டு வரவேண்டும். அதுதான் சரியான பதம். பார்ப்பதற்கும் கண்ணாடி போன்று இருக்க வேண்டும். இந்த பதத்திற்கு வந்ததும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் நிலக்கடலையை சேர்க்கலாம்.

அனைவருக்கும் பிடித்தமான வேர்க்கடலை குழம்பு! இதுபோல செய்து பாருங்கள்…!

நிலக்கடலையை வெல்லத்தோடு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த வெல்லம் மற்றும் கடலையை அதில் சேர்த்து நன்கு பரப்பி விட வேண்டும். மிதமான சூட்டுக்கு ஆறியதும் இதை விருப்பமான வடிவில் நறுக்கி அப்படியே வைத்து விடவும். முழுமையாக ஆறிய பிறகு துண்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமான கடலை மிட்டாய் தயார்.