கோவில் சுவையில் அட்டகாசமான கற்கண்டு சாதம்! ஒருமுறை சுவைத்துப் பாருங்கள் அடிக்கடி செய்வீர்கள்!

கற்கண்டு சாதம் கோவில்களில் பிரசாதமாக வழங்கக்கூடிய ஒரு வகை இனிப்பு உணவாகும். இந்த கற்கண்டு சாதம் பச்சரிசியுடன் நெய், பால், கற்கண்டு ஆகியன சேர்த்து மணமும் சுவையும் நிறைந்து அட்டகாசமாக இருக்கும். இந்த சர்க்கரை சாதத்தை சுவைக்க நீங்கள் கோவில்களுக்குச் சென்று தான் சுவைக்க வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே அதே சுவையில் கற்கண்டு சாதத்தை நீங்கள் செய்ய முடியும். தேவையான பொருட்களோடு பக்குவத்தையும் சரியாக அறிந்திருந்தால் அட்டகாசமான கற்கண்டு சாதம் நீங்கள் செய்து அசத்திடலாம்.

கோவில் சுவையில் அட்டகாசமான புளியோதரை.. எவ்வளவு செய்தாலும் கொஞ்சமும் மிஞ்சாது!!!

இந்த கற்கண்டு சாதம் செய்வதற்கு ஒரு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். பொன்னி பச்சரிசியை தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீர் கொதித்ததும் அதனுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். அரிசி நன்கு குழைந்து மசிந்து வர வேண்டும். ஒருவேளை தண்ணீர் அதிகமாக இருந்தால் சாதத்தை வடித்துக் கொள்ளலாம்.

சாதம் நன்கு குழைந்து மசிந்த பிறகு இதில் ஒரு டம்ளர் அளவு பாலை சேர்க்க வேண்டும். மூன்று கப் அளவு கற்கண்டு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கற்கண்டு கரைந்து சாதம் கெட்டியாகும் வரை சாதத்தோடு சேர்த்து கிளறி விட வேண்டும். சாதம் நன்கு குழைந்ததும் இதில் மூன்று ஏலக்காய்களை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சாதத்தை இறக்கி விடலாம்.

இதற்கு தாளிப்பதற்கு நூறு கிராம் அளவு நெய்யை உருக்கி கொள்ள வேண்டும். நெய் உருகியதும் இதில் பத்து முந்திரி பருப்பு, ஒரு ஸ்பூன் உலர் திராட்சை, பத்து பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பு, சிறிதளவு சாரை பருப்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு வறுபட்டு நிறம் மாறியதும் சாதத்தில் மேல் கொட்டி கிளறி விடலாம்.

சாதம் சற்று தண்ணீராக இருப்பது போல் தோன்றலாம் கவலை வேண்டாம் சாதத்தின் சூடு ஆற ஆற கெட்டிப்பட்டு விடும். அவ்வளவுதான் மனம் வீசும் சுவையான கற்கண்டு சாதம் கோவில்களில் தரும் சுவையில் அட்டகாசமாக தயாராகி விட்டது!