மீன் பொழிச்சது கேரளாவில் மிகப் பிரபலமான ஒரு உணவு வகையாகும். இதனை கேரளாவில் கரிமீன் பொழிச்சது என்றும் சொல்லுவார்கள். மீன் பிரியர்களுக்கு வழக்கமான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் என்று இல்லாமல் வித்தியாசமாக மீனில் ஏதேனும் ரெசிபி முயற்சி செய்யலாம் என்று தோன்றினால் மறக்காமல் இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.
மீன் பொழிச்சது வாழை இலையில் மசாலாக்கள் வைத்து சமைப்பதால் இதன் மணமும் சுவையும் அருமையாக இருக்கும். இந்த மீன் பொழிச்சது எந்த வகையான மீனினை பயன்படுத்தியும் செய்யலாம்.
இறால் வைத்து அருமையான இறால் தவா ஃப்ரை… இந்த இறால் தவா ஃப்ரை முயற்சி செய்து பாருங்கள்!!
மீன் பொழிச்சது செய்ய முதலில் 300 கிராம் அளவிற்கு மீன் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்த மீனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். இந்த மசாலாக்கள் தடவிய மீனை பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.
இப்பொழுது ஒரு தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு மசாலா தடவி ஊற வைத்த மீனை வைக்க வேண்டும். மீனின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இரண்டு பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி வெங்காயம் ஆகியவை நன்கு வதக்க வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் தனியாத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
மசாலா நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது ஒரு வாழை இலையை லேசாக அடுப்பில் வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்த மசாலாவை வாழை இலையில் வைத்து அதன் மேல் பொறித்த மீனினை வைக்க வேண்டும். மீண்டும் அந்த மீனின் மீது மசாலாக்கள் வைத்து மூடி வைக்கவும். மீனின் மேலும் கீழும் முழுமையாக மசாலாக்கள் மூடி இருக்கும் படி வைத்த பின் வாழை இலையை மீனை சுற்றி மடித்து கட்டிவிடலாம்.
இப்பொழுது வாழை இலையில் கட்டிய மீனை வாழை இலையோடு சேர்த்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வேகும்படி வைக்க வேண்டும். ஒருபுறம் சிவந்து வந்ததும் அதனை மறுபுறமும் திருப்பி வேக வைக்க வேண்டும்.
கிராமத்து மணம் வீசும் முருங்கைக்காய் போட்ட குடல் கறி குழம்பு…!
வாழையிலையோடு மசாலாக்களும் சேர்த்து அந்த மீன் இப்பொழுது அட்டகாசமான சுவையில் சாப்பிட தயாராகி இருக்கும்.
அவ்வளவுதான் கேரளா ஸ்டைலில் மீன் பொரிச்சது தயார்!!!