செட்டிநாட்டு ஸ்டைலில் சுவையான கருணைக்கிழங்கு மசியல்…!

கருணைக்கிழங்கு மசியல் தமிழகத்தில் பிரபலமான ஒரு சைட் டிஷ் ரெசிபி ஆகும். இந்தக் கருணைக்கிழங்கு மசியல் செய்வது மிக சுலபம். அதே சமயம் உடலுக்கும் நன்மை நிறைந்தது. அனைத்து வகையான சாதத்திற்கும் ஏற்ற இந்த கருணைக்கிழங்கு மசியலை பல்வேறு பாணிகளில் செய்யலாம். இப்பொழுது நாம் செட்டிநாட்டு முறையில் எப்படி கருணைக்கிழங்கு மசியல் செய்வது என்பதை பார்ப்போம்.

பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கருணைக்கிழங்கு குழம்பு!

கருணைக்கிழங்கு மசியல் செய்வதற்கு 300 கிராம் அளவு கருணைக்கிழங்கை நன்கு கழுவி கொள்ள வேண்டும். கழுவிய இந்த கிழங்குகளை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். விசில் வந்து அடங்கிய பிறகு கிழங்குகளை ஆற வைக்க வேண்டும். இவை ஆறியதும் இவற்றின் தோலை உரித்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். 10 பல் பூண்டு, 20 சின்ன வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு தக்காளியையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு புளியுடன் தேவையான அளவு உப்பை ஊற வைக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் மூன்று குழிக்கரண்டி சேர்த்து காயவைத்து கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, 1/4 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கும் பொழுது இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதையும் வதக்கவும். இவை நன்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கு சேர்த்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். ஊற வைத்திருக்கும் உப்பு மற்றும் புளியை கரைத்து இவற்றுடன் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும். சுரண்டு வரும்பொழுது இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார்.