ரக்ஷா பந்தனுக்கு என்ன செய்யுறதுனு குழப்பமா? உங்கள் உடன்பிறப்புக்கு இப்படி காஜூ கத்லி செய்து கொடுத்து அசத்துங்கள்!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் பௌர்ணமி அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது. ரக்ஷா பந்தன் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு கைகளில் ராக்கி அணிவித்தும், பரிசுகள், இனிப்புகள் வழங்கியும் உடன்பிறப்புகளை சிறப்பு செய்யும் விதமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை வட இந்திய பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பெரும்பாலும் ரக்ஷா பந்தன் அன்று செய்யப்படும் இனிப்புகளில் இந்த காஜு கத்லி தவறாது இடம் பிடித்து விடும். காஜு கத்லி அல்லது முந்திரி பர்ஃபி என்பது முந்திரிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான இனிப்பு வகையாகும். இந்த இனிப்பு வகை வட இந்தியாவில் மிகவும் பிரபலம். முந்திரி, சீனி, பால், நெய் என குறைவான பொருட்களை வைத்து இந்த காஜு கத்லியை மிக எளிமையாக செய்துவிடலாம்.

இவ்வளவு டேஸ்டியான கோதுமை அல்வாவா… இதை செஞ்சு பாருங்க இனி கடைகளில் அல்வா வாங்க மாட்டீங்க…!

காஜூ கட்லி செய்வதற்கு 200 கிராம் முந்திரிப் பருப்பை ஊறவைத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பு நன்றாக ஊறிய பின்பு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பாலை எடுத்து இந்த ஊற வைத்த முந்திரியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மிக்ஸியில் மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடி கனமான ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த முந்திரி விழுதை சேர்க்கவும். 200 கிராம் அளவு சீனியை இதில் இப்பொழுது சேர்க்க வேண்டும். சீனி கரைந்து கெட்டியாக வரவேண்டும். கெட்டியாக வரும் பொழுது 50 கிராம் அளவு நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இடை வடாமல் கிளற வேண்டும்.

இந்த இனிப்பு நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது அடுப்பை விட்டு இறக்கி விடலாம். முன்கூட்டியே சப்பாத்தி தேய்க்கும் பலகையில் நெய் தடவி வைக்க வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கியவுடன் நெய் தடவிய பலகையில் இந்த இனிப்பை வைத்து கரண்டியால் ஓரளவு சமப்படுத்தி சப்பாத்தி தேய்க்கும் குழவியால் மெல்லிசாக தேய்த்து விடவும். கொஞ்சம் ஆறியதும் டைமண்ட் வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறலாம். துண்டுகள் போடுவதற்கு முன்பு சில்வர் லீவ்ஸ் பக்குவமாக வைத்து அதன் பின்னர் டைமண்ட் வடிவில் வெட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான நெய் ஒழுகும் மைசூர் பாகு!!

அவ்வளவுதான் சுவையான மிக எளிமையான முந்திரி பர்பி தயாராகி விடும்!