இட்லி, தோசை, உப்புமா என அனைத்து விதமான டிபன்களுக்கும் சட்னி, சாம்பார் என்று தினமும் வைத்து விதவிதமாய் சாப்பிட்டாலும் அவசரத்திற்கு கை கொடுப்பது இட்லி பொடி தான். காலை பரபரப்பில் நேரம் பற்றாக்குறையாய் இருந்தால் இந்த இட்லி பொடி வைத்து நாம் சமாளித்து விடலாம். சிலருக்கு சட்னி, சாம்பார் இருந்தாலும் இந்த இட்லி பொடி இருந்தால்தான் உணவு நிறைவாக இருப்பது போல் தோன்றும். மேலும் பொடி இட்லி, பொடி தோசை என இந்த இட்லி பொடியை வைத்து வித்தியாசமான முறையில் ரெசிபிகளை செய்ய முடியும். இந்த இட்லி பொடியை ஒரு முறை செய்து வைத்து விட்டால் போதும் மாதக்கணக்கில் தாராளமாக பயன்படுத்தலாம்.
சாம்பார் பொடி இப்படி வீட்டில் நீங்களே தயாரித்து பாருங்கள்… ஒரு போதும் கடையில் இனி வாங்க மாட்டீர்கள்…
இந்த இட்லி பொடி செய்வதற்கு முதலில் 10 பல் பூண்டினை உரித்து நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு கப் அளவு உளுத்தம் பருப்பையும் முக்கால் கப் அளவிற்கு துவரம் பருப்பையும் தனித்தனியாக நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தனியே வைத்துவிட்டு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு 100 கிராம் அளவிற்கு வர மிளகாய் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பெருங்காயத்தை ஒரு பெரிய துண்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் எண்ணெய் சேர்த்து ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் பூண்டை மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும். பிறகு இரண்டு கொத்து கறிவேப்பிலையை மொறுமொறுப்பாய் சிவக்க வறுக்க வேண்டும். இப்பொழுது எண்ணெய் ஏதும் சேர்க்காமல் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எள்ளை வறுத்து எடுக்கவும். தேவையான அளவு உப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தையும் வறுத்து எடுத்த பிறகு சிறிது நேரம் வெயிலில் வைக்கவும். வெயிலில் வைத்து எடுத்த பிறகு முதலில் துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். பிறகு உளுத்தம் பருப்பை கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதன் பின்னர் மிளகாய், பூண்டு, பெருங்காயம், கருவேப்பிலை, எள் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும் இவற்றை அரைத்த பிறகு ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பருப்புக்களையும் சேர்த்து உப்பு சேர்த்து மீண்டும் இரண்டு முறை மிக்ஸி ஜாரில் அரைத்து இதனை எடுத்து ஒரு பாட்டிலில் காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.
இட்லி சாஃப்டாக வரவில்லையா? பஞ்சு போன்ற மென்மையான இட்லிக்கு இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
அவ்வளவுதான் சுவையான இட்லி பொடி தயாராகி விட்டது!