புலாவ் அனைவருக்கும் பிடித்தமான உணவு வகை ஆகும். புலாவில் பல வகைகள் உண்டு. அனைத்தும் தனித்துவமான சுவையில் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். அதிலும் குறிப்பாக இந்த தக்காளி புலாவ் அருமையான சுவையுடன் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த தக்காளி புலாவ். இதனை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து விடலாம். வாருங்கள் உணவகங்களில் கிடைக்கும் சுவையில் அட்டகாசமான தக்காளி புலாவ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தக்காளி புலாவ் செய்வதற்கு முதலில் அதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதனுடன் பாதி வெங்காயம், 5 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதனை விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி அதனை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றவும். நெய் சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை அன்னாசிப்பூ, சிறிதளவு ஜாதிக்காய், கல்பாசி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 15 முந்திரி பருப்பை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கி மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து அதையும் நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து உடையாமல் கிளறி விட வேண்டும். இதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் வரை வைக்கவும். விசில் அடங்கியதும் திறந்து பார்த்தால் அட்டகாசமான தக்காளி புலாவ் தயார்…!