பாதாம் பால் சுவையான அதேசமயம் சத்து நிறைந்த பான வகையாகும். வழக்கமாக அருந்தும் டீ காபிக்கு பதிலாக இந்த பாதாம் பாலை அருந்தலாம். இந்த பாதாம் பால் கடைகளில் மட்டும் தான் கிடைக்கும் என்று இல்லை. கடைகளில் கிடைக்கும் சுவையில் நாம் வீட்டிலேயே பாதாம் பால் தயார் செய்ய முடியும். இதற்காக எந்த ரெடிமேட் மிக்சும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வாருங்கள் சத்தான சுவையான இந்த பாதாம் பால் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பாதாம் பால் செய்வதற்கு முதலில் அரைக்கப் அளவு பாதாமை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளலாம். முதல் நாள் ஊற வைக்க இயலாவிட்டால் இதனை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும். இப்பொழுது ஊறவைத்த பாதாமின் தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் உரித்த பாதாமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் அரை கப் அளவு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்கவும்.
அட்டகாசமான சுவையில் பாதாம் அல்வா… இப்படி செய்து பாருங்கள்!!!
நான்கு ஏலக்காய்களை தட்டி சேர்த்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் அளவிற்கு குங்குமப்பூவையும் சேர்த்து இதனை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். திப்பிகள் ஏதும் இல்லாமல் மைய அரைக்கவும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து முக்கால் லிட்டர் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் நன்கு கொதித்து வந்ததும் மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இதனை இடையே அவ்வப்போது கிளறி விடவும். பால் நன்கு கொதித்ததும் கால் கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து விட வேண்டும். மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி அதையும் இதில் சேர்க்கவும்.
பால் அதிக தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக வரும் வரை இதனை காய்ச்ச வேண்டும். இதில் நாம் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் அது பாதாம் பாலுக்கு நல்ல நிறம் கொடுப்பதோடு சுவையும் நன்றாக இருக்கும். இறுதியாக ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து இதனை கிளறி இறக்கி விடலாம். இதன் மேல் உங்களுக்கு விருப்பமான நட்ஸ்களை பொடியாக நறுக்கி தூவி பரிமாறலாம். மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில் இதனை சூடாக பருகலாம். வெயில் காலம் என்றால் இதனை ஆறவைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்தும் பரிமாறலாம். எப்படி சாப்பிட்டாலும் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.