ஆட்டின் உடலில் உள்ள மண்ணீரல் பகுதியை சுவரொட்டி என்று அழைப்பதுண்டு. இந்த சுவரொட்டி உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இந்த சுவரொட்டிக்கு உண்டு. வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆகியவற்றை சரி செய்யவும் இது உதவுகிறது. இந்த சுவரொட்டி வைத்து அட்டகாசமான சுவரொட்டி வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இரத்த சோகையை விரட்டியடிக்கும் ஆட்டின் ஈரலை வைத்து அருமையான ஈரல் வறுவல்!
இந்த சுவரொட்டி வறுவல் செய்வதற்கு அரை கிலோ அளவு சுவரொட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு 2 நிமிடங்கள் இந்த சுவரொட்டி அதில் வைத்து மூடி வைக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு மேலே உள்ள தோலை மட்டும் நீக்கி விடவும். பிறகு இதனை சதுர வடிவில் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கும் பொழுது ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கி இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் சுவரொட்டியை அதில் சேர்க்க வேண்டும். சுவரொட்டியை சிறிது நேரம் எண்ணெயில் வதக்கிய பிறகு இதற்கான மசாலாக்களை சேர்க்கலாம். மூன்று மேசை கரண்டி அளவிற்கு மிளகாய் தூள், இரண்டு மேசைக் கரண்டி தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து இதனை அதிகமான தீயில் வைக்க வேண்டும். இதனை சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அவ்வபோது கிளறி விடவும். நன்கு கொதித்து தண்ணீர் வற்றி வருவல் பதத்திற்கு வந்ததும் இதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். சுவரொட்டி சீக்கிரம் வெந்துவிடும் இதை மட்டன் போல் நீண்ட நேரம் வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வளவுதான் எளிமையான அதே சமயம் சத்துக்கள் நிறைந்த சுவரொட்டி வருவல் தயார்.