சட்டுனு செய்யலாம் சத்துக்கள் நிறைந்த ராகி சூப்!

ராகி உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவு பொருளாகும். நம் அன்றாட உணவில் தினமும் ராகியை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக காலை உணவில் நாம் அதிகம் ராகியை பயன்படுத்தினால் நம் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இந்த ராகியை பயன்படுத்தி பல ரெசிபிகளை சுவை நிறைந்ததாக செய்ய முடியும். இப்பொழுது இந்த ராகி வைத்து எப்படி சுவையான சூப் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சூப்பர்..! கடைகளில் விற்கும் சுவையிலேயே தித்திக்கும் ரசமலாய் சுலபமாக செய்யலாம்…!

ராகி சூப் செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் ஒன்றரை மேஜை கரண்டி அளவிற்கு ராகி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ராகி மாவில் கால் கப் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். கட்டிகள் ஏதும் இல்லாமல் இதனை நன்றாக கரைத்துக் கொள்ளவும். இதனை தனியாக வைத்துவிடலாம் பிறகு ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணை உருகியதும் நாம் காய்கறிகளை சேர்க்கலாம். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய இரண்டு கேரட், 4 பீன்ஸ், இரண்டு பச்சை மிளகாய், ஐந்து பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். இவற்றோடு ஒரு கைப்பிடி அளவு பச்சைப்பட்டாணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது இதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொள்ள வேண்டும். சூப் கெட்டியாக இருக்க வேண்டும் என்றால் தண்ணீர் சிறிதளவு சேர்த்தால் போதுமானது. இல்லை என்றால் இரண்டு கப் அல்லது அதற்கு மேல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் ராகி மாவை சேர்த்து இதனை சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் வேகும் அளவிற்கு இதனை கொதிக்க விடவும். இது நன்கு கொதித்து காய்கறிகள் வெந்ததும். அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சத்தான ராகி சூப் தயாராகி விட்டது.

Exit mobile version