சூப்பர்..! கடைகளில் விற்கும் சுவையிலேயே தித்திக்கும் ரசமலாய் சுலபமாக செய்யலாம்…!

ரசமலாய் பாலை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகையாகும். இந்தியாவில் பிரபலமான இனிப்பு வகைகளில் இந்த ரசமலாய் ஒன்று. பாலில் இருந்து பன்னீர் பிரித்தெடுத்து அதை வைத்து ரசமலாய் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த இனிப்பை கடைகளிலும், உணவகங்களிலும் நீங்கள் ருசித்திருக்கலாம். ஆனால் இனி இந்த இனிப்பை வாங்க வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே சுவையான இந்த ரசமலாய் செய்து அசத்த முடியும். வாருங்கள் இந்த சுவையான ரசமலாய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ரசமலாய் செய்ய முதலில் இரண்டு லிட்டர் அளவு பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பால் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். அடுப்பை அணைத்த பிறகு இதில் 3 எலுமிச்சை‌ பழத்தை சாறு எடுத்து அந்த சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ள வேண்டும். அப்பொழுது பால் திரிந்து வரும். பால் முழுவதும் திரிந்த பிறகு இதனை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்ட வேண்டும். 30 நிமிடங்கள் இந்த துணியை கட்டி தொங்க விட வேண்டும். இதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடியும் நேரத்திற்குள் நாம் ரபடியை தயார் செய்ய தொடங்கி விடலாம்.

என்ன? ராகியில் இவ்வளவு சுவையான அல்வா சுலபமாக செய்யலாமா… சுவை நிறைந்த ராகி அல்வா…!

ரபடி தயார் செய்வதற்கு நான்கு கப் அளவிற்கு கெட்டியான பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாலுடன் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த பால் நன்கு வற்றி வர வேண்டும். இந்த பாலில் சிறிதளவு எடுத்து அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து தனியாக வைத்து விடவும். குங்குமப்பூ நன்கு ஊற வேண்டும். அடுப்பில் உள்ள பால் நன்கு வற்றும் வரை வைத்து விடவும்.

இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் 10 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் இரண்டு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். கம்பி பதம் வர வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது நாம் வடிகட்டி வைத்திருக்கும் பன்னீரை எடுத்துக் கொள்ளவும். இந்த பன்னீரை ஒரு பவுலின் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை நன்கு பிசையவும். அப்பொழுதுதான் ரசமலாய் மென்மையாக கிடைக்கும். இதை பத்து நிமிடங்கள் பிசைந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரசமலாய்களை ஒவ்வொன்றாக சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும்.

அனைத்து ரசமலாய்களையும் சர்க்கரை பாகில் சேர்த்த பிறகு இதனை மூடி 10 நிமிடங்கள் வரை வேக விடவும். 10 நிமிடங்கள் வெந்து ரசமலாய் உப்பி வந்திருக்கும். இப்பொழுது இவற்றை வெளியே எடுத்து விடலாம். பிறகு கொதித்து வற்றி இருக்கும் ரபடியில் கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் மற்றும் ஊற வைத்திருக்கும் சிறிதளவு குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கி விடவும். இந்த ரபடி ஆறிய பிறகு நாம் சர்க்கரைப்பாகில் சேர்த்து எடுத்த ரசமலாய்களை ரபடியில் சேர்க்கலாம். இதில் உங்களுக்கு விருப்பமான நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமாக சுவையுடன் ரசமலாய் தயாராகிவிட்டது.

Exit mobile version