அனைத்து பயன்களையும் அள்ளித் தரும் கம்பு வைத்து அருமையான கம்பு கிச்சடி…!

காலம் காலமாக நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் சிறு தானியங்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு. முன்பெல்லாம் அன்றாட உணவில் இந்த சிறுதானியங்களை பயன்படுத்தி செய்யும் உணவுகள் கட்டாயம் இடம் பெறும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர் வரை நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து உடல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்தார்கள். இப்பொழுது சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. நோய்களும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு இல்லாமல் உணவில் அதிக அளவு சிறுதானியங்களை சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடல் ஆரோக்கியத்துடனும் வாழலாம். அப்படி ஒரு மிக முக்கியமான சிறுதானிய வகை தான் கம்பு.

இந்தக் கம்பில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனிஸ், விட்டமின் பி, கால்சியம், துத்தநாகம் என உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்ததாகவும் இந்த கம்பு இருக்கிறது. உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த கம்பை வைத்து எப்படி சுவையான கம்பு கிச்சடி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஒருமுறை மேகியை இப்படி முட்டை சேர்த்து செய்து பாருங்கள்.. சூப்பரான எக் மேகி…!

கம்பு கிச்சடி செய்வதற்கு முதல் நாள் இரவே அரை கப் அளவு கம்பை நன்கு அலசி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கிச்சடி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கால் கப் அளவு பாசிப்பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். 1 கேரட் மற்றும் 5 பீன்ஸ் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய மூன்று பல் பூண்டு, ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மென்மையாகும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் சமையல் வேலையை எளிதாக்கும் சூப்பரான கிச்சன் டிப்ஸ்கள்…!

வெங்காயம் வதங்கி மென்மையானதும் இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம். தக்காளியை வதக்கும்பொழுது முக்கால் டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் மல்லி தூள், கால் டீஸ்பூனிற்கும் குறைவாக கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இந்த நிலையில் நாம் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்க்கவும். ஒரு கப் அளவு பச்சை பட்டாணியையும் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளை சிறிது நேரம் எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். காய்கறிகள் ஓரளவு வெந்ததும் இப்பொழுது அரை கப் அளவிற்கு நாம் ஊற வைத்திருக்கும் கம்பை தண்ணீரை வடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கால் கப் அளவு பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.

சேமியாவை இப்படி சமைத்து பாருங்கள்… காலை டிபனுக்கு சூப்பரான லெமன் சேமியா…!

இந்த கம்புக்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இரண்டரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். தண்ணீரை சேர்த்த பிறகு உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கலாம். குக்கரை மூடி ஆறு விசில் வரும் வரை வைக்க வேண்டும். விசில் வந்து அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறி விடலாம். விருப்பப்பட்டால் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். கூடுதல் சுவையாக இருக்கும். அவ்வளவுதான் அட்டகாசமான கம்பு கிச்சடி தயார்.