வாயில் வைத்ததும் கரையும் சுவையில் அருமையான பாசிப்பருப்பு அல்வா!

கருப்பட்டி அல்வா, கேரட் அல்வா, கோதுமை அல்வா, பூசணிக்காய் அல்வா, பரங்கிக்காய் அல்வா, சுரைக்காய் அல்வா என எத்தனை வகையான அல்வா செய்தாலும் இனிப்பு பிரியர்களுக்கு அது அத்தனையுமே பிடிக்கும். இதே வரிசையில் சத்தான சுவை நிறைந்த ஒரு அல்வா தான் பாசிப்பருப்பு அல்வா.‌ நெய் ஒழுக பாசிப்பருப்பில் வாயில் வைத்ததும் கரையும் படி செய்யும் இந்த அல்வாவானது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அத்தனை சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பாசிப்பருப்பு அல்வா செய்வதற்கு முதலில் கால் கிலோ அளவு பாசிப்பருப்பை நன்றாக தண்ணீரில் அலசிக்கொள்ள வேண்டும். இதனை நல்ல தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்றாக ஊறியதும் ஒரு தட்டில் வெள்ளைத் துணியை விரித்து ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பை அதில் பரப்பி விட வேண்டும். இதன் மேல் டிஷ்யூ அல்லது வெள்ளை துணி கொண்டு ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து விட வேண்டும்.

என்ன? ராகியில் இவ்வளவு சுவையான அல்வா சுலபமாக செய்யலாமா… சுவை நிறைந்த ராகி அல்வா…!

ஈரப்பதத்தை துடைத்து விட்ட பிறகு பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை விழுதாக அரைத்து விடாமல் பல்ஸ் மோடில் வைத்து இரண்டு சுற்று மட்டும் அரைத்தால் போதும். பாசிப்பருப்பு முழுதாகவும் இருக்கக் கூடாது அதேபோல் முழுமையாக அரைப்பட்டும் இருக்கக் கூடாது. இப்பொழுது அரைத்த பாசிப்பருப்பை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தனியாக வைத்து விடவும்.

ஒரு பேனில் ஒரு மேசை கரண்டி அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளவும். இதில் அரை கப் அளவு முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பருப்பு வறுபட்டதும் பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா என விரும்பிய நட்ஸ் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை தனியாக வைத்த பிறகு அதே பேனில் சிறிதளவு நெய் சேர்த்து உலர் திராட்சை விரும்பிய அளவு சேர்த்து அது உப்பி வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் கால் கப் அளவு நெய் சேர்க்கவும். நெய் உருகியதும் அதில் ஒரு மேசை கரண்டி ரவை மற்றும் ஒரு மேசை கரண்டி அளவிற்கு கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவை இரண்டையும் மிதமான தீயில் இரண்டு நிமிடம் வரை வறுக்க வேண்டும். இரண்டு நிமிடத்திற்கு பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும்.

பாசிப்பருப்பின் ஈரத்தன்மை நீங்கும் வரை வறுக்கவும். மிதமான தீயில் 15 நிமிடங்கள் வரை இதனை நன்றாக வறுக்க வேண்டும். பாசிப்பருப்பு வறுபட்டு அதில் உள்ள ஈரத்தன்மை போய் உதிரியாக வந்ததும் இதில் ஒரு கப் அளவு தண்ணீர் மற்றும் ஒரு கப் அளவு பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். குறைவான தீயில் வைத்து இதனை கலக்க வேண்டும். இப்பொழுது இது இறுகி வரும் பொழுது இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாயில் வைத்ததும் கரையும் பீட்ரூட் அல்வா இப்படி செய்து பாருங்கள்…!

இனிப்பிற்காக இரண்டு கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நெய் அவ்வபோது சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்து அல்வா இறுதி வரும் பொழுது சிறிதளவு ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் அட்டகாசமாக வாயில் வைத்ததும் கரையும் சுவையில் பாசிப்பருப்பு அல்வா தயார்.