பீட்ரூட் என்றாலே பல குழந்தைகள் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் அந்த பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்தத்தில் இரும்பு சத்து அளவு அதிகரித்து ரத்த சோகை வராமல் இருக்க பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் பீட்ரூட் மூளை ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சத்து நிறைந்த பீட்ரூட்டை குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் பீட்ரூட் அல்வாவாக செய்து கொடுக்கலாம். இந்த பீட்ரூட் அல்வாவை குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் ருசித்து சாப்பிடுவார்கள். வாருங்கள் வாயில் வைத்ததும் கரையக்கூடிய வகையில் சத்தான இந்த பீட்ரூட்டை வைத்து எப்படி சுவையான பீட்ரூட் அல்வா செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
நாவில் எச்சில் ஊறச் செய்யும் கேரட் அல்வாவில் இத்தனை நன்மைகளா…!
பீட்ரூட் அல்வா செய்வதற்கு இரண்டு கப் அளவிற்கு பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் உருகியதும் அதில் பத்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உலர் திராட்சை சேர்த்து உலர் திராட்சை உப்பி வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை தனியாக வைத்து விடலாம்.
இப்பொழுது அதே நெய்யில் நாம் ஏற்கனவே துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பீட்ரூட் பச்சை வாசனை போகும் வரை ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு இதில் நாம் அல்வாவிற்கு தேவையான பாலை ஊற்றலாம். ஒன்றரை கப் அளவிற்கு பாலை ஊற்றி இதனை கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். பால் வற்றி கெட்டி ஆனதும் இதில் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சட்னி சுவையாக இப்படி செய்து பாருங்கள்!
சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சக்கரை அல்லது வெல்லமும் உபயோகிக்கலாம். சர்க்கரை சேர்த்த பிறகு இதனை நன்றாக கிளறி விட வேண்டும். இப்பொழுது வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சைகளை சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு ஏலக்காய் தூள் தூவி விட வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் அல்வா தயாராகி விட்டது.