ஹோட்டல் சுவையில் மொறுமொறுப்பான பச்சைப் பயறு தோசை…!

பயறு வகைகள் அனைத்துமே உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் அளிக்கக் கூடியவை. குறிப்பாக பச்சைப் பயறு உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் நாம் பச்சைப்பயறு சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைப் பயறை வேகவைத்து அப்படியே சாப்பிடுவது என்பது பலருக்கும் அவ்வளவாக பிடிக்காது.

அப்படி பச்சை பயறு சாப்பிட பிடிக்காதவர்கள் அதை வைத்து ஏதாவது ரெசிபி செய்து சாப்பிடலாம் என்று நினைத்தால் இந்த பச்சை பயறு தோசையை முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சைப் பயறு தோசை நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். வாருங்கள் இந்த தோசையை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஈஸியா செய்யலாம் பன்னீர் மசாலா தோசை.. வீட்டில் உள்ளோர் வியந்து பாராட்டுவாங்க…!

பச்சைப்பயிறு தோசை செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அளவு பச்சைப் பயறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு பச்சரிசியை சேர்த்துக் கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக தண்ணீரில் இரண்டு முறை அலசி கொள்ள வேண்டும்.

பிறகு நல்ல தண்ணீர் விட்டு இதனை ஊற வைக்க வேண்டும். மூன்று கப் அளவு நல்ல தண்ணீர் விட்டு இதனை ஊற வைக்கலாம். குறைந்தது 8 மணி நேரம் இது நன்கு ஊற வேண்டும். காலை உணவுக்கு பச்சைப்பயிறு தோசை செய்யப்போகிறீர்கள் என்றால் முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலை பச்சைப் பயறு நன்கு ஊறிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீரை வடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், அரை கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இதில் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு இதனை அரைக்க வேண்டும். நாம் ஏற்கனவே பச்சைப்பயிறு ஊறவைத்த தண்ணீரை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த தண்ணீரை வீணாக்க வேண்டாம். தோசை மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுலபமா செய்யலாம் அவல் வைத்து சுவையான அவல் தோசை…! செய்வது எப்படி?

இப்பொழுது கல்லை காய வைத்து கொள்ளவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து இதனை மெல்லிசாக ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். சுற்றிலும் எண்ணெய் விட்டு நல்ல மொறு மொறுப்பாக எடுத்தால் எந்த சட்னி வைத்து சாப்பிட்டாலும் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். விருப்பப்பட்டால் இதன் மேல் காய்கறிகள் தூவியும் பரிமாறலாம்.