ஈஸியா செய்யலாம் இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு சட்னி…!

இட்லி, தோசை என அனைத்து வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்ற காரசாரமான சுவையான ஒரு சட்னி தான் பூண்டு சட்னி. இந்த பூண்டு சட்னி செய்வதற்கு வெங்காயம், பூண்டு, வர மிளகாய் போன்ற சில பொருட்கள் இருந்தால் போதும். அட்டகாசமான பூண்டு சட்னியை நாம் செய்ய முடியும். இந்த சட்னியில் அதிக எண்ணெய் சேர்த்து செய்வதால் இதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கவும் முடியும். காரசாரமான இந்த சட்னி இருந்தால் போதும் எத்தனை இட்லி, தோசை சாப்பிட்டோம் என்று நமக்கே தெரியாது. வாருங்கள் சுவையான இந்த பூண்டு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஐந்து சின்ன வெங்காயம் மற்றும் 25 பல் பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை ஒன்று இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். நல்லெண்ணையை இதற்கு உபயோகப்படுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் இதில் தோல் உரித்து நறுக்கி வைத்திருக்கும் ஐந்து சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். பிறகு 25 பல் பூண்டையும் சேர்க்க வேண்டும். இவற்றை சேர்த்த பிறகு 15 வர மிளகாய் சேர்த்து வதக்கவும். காரம் குறைவாக வேண்டும் என்றால் மிளகாயின் அளவை குறைத்துக் கொள்ளலாம். காரம் குறைவாக ஆனால் சட்னி நல்ல நிறமாக இருக்க வேண்டும் என்றால் பாதிக்கு பாதி காஷ்மீரி மிளகாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது இதனை வதக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை இதை வதக்கினால் போதும்.

வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து இதனை ஆற விடவும். ஆறிய பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் நான்கு மேசை கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்க்கவும், சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்க்க வேண்டும். பிறகு சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்க்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இதனை தாளித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காய விழுதை சேர்த்து இதனை சிறிது நேரம் வதக்கி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பூண்டு சட்னி காரசாரமாக தயாராகி விட்டது.