இன்றைக்கு என்ன குழம்பு வைப்பது என்று தினமும் யோசித்து குழம்பிக் கொண்டிருப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த வெந்தயக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். வெந்தயம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒரு உணவுப்பொருள். மேலும் இந்த வெந்தய குழம்பு செய்வதற்கு மற்ற காய்கறிகள் எதுவும் தேவையில்லை. வெந்தய குழம்பு செய்ய நாம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம், புளி, கொத்தமல்லி தழை இவற்றோடு சேர்ந்து அந்த வெந்தயத்தின் தன்மையும் இறங்கிய இந்த குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட, அடடா.. அத்தனை சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த வெந்தய குழம்பை கிராமத்து முறையில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வெந்தய குழம்பு செய்ய முதலில் இதற்கான பொடியை தயார் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் எதுவும் சேர்க்காமல் இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு வெந்தயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் அரை மேஜை கரண்டி அளவு சீரகத்தை சேர்க்க வேண்டும் இவை இரண்டையும் நன்றாக வறுக்க வேண்டும். வெந்தயத்தை மிகவும் அதிகமாக வறுத்தால் கசப்பு சுவை வந்துவிடும் எனவே சிவக்க வறுத்தால் போதுமானது. வெந்தயமும் சீரகமும் நன்கு வறுபட்டதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி தான் இந்த வெந்தய குழம்பிற்கு சுவையூட்ட போகிற மிக முக்கியமான பொடி.
பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கருணைக்கிழங்கு குழம்பு!
இப்பொழுது அடுப்பில் ஒரு மண் பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து கடுகை நன்கு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் அரை ஸ்பூன் அளவு வெந்தயம் சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் சீரகம் மற்றும் 3 காய்ந்த மிளகாய்களை சேர்க்க வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து 10 பல் பூண்டை தோல் உரித்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பூண்டு ஓரளவு வதங்கிய நிலையில் 25 முதல் 30 சின்ன வெங்காயத்தை தோலுரித்து இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயமும் பூண்டும் நன்கு வதங்க வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காயத்தூள், மூன்று ஸ்பூன் அளவு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இவை வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய 2 தக்காளிகளை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கி மென்மையானதும் நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இதனுடன் ஊற்றி கொதிக்க விட வேண்டும். புளி கொதிக்க தொடங்கும் பொழுது சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்த்து கொதிக்க விட வேண்டும் அப்பொழுதுதான் கொத்தமல்லியின் வாசனையும் இதில் முழுமையாக இறங்கி சுவையாக இருக்கும். குழம்பு நன்கு கொதித்ததும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் வெந்தய பொடியை இரண்டு ஸ்பூன் தூவி இதனை ஒரு நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடலாம். அடுப்பில் இருந்து இறக்கும் முன்பு இதன் மேல் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு இறக்கினால் சுவையாக இருக்கும்.
அவ்வளவுதான் கெட்டியான சுவை நிறைந்த வெந்தயக் குழம்பு தயாராகி விட்டது…!