கிராமத்து சுவையில் காரசாரமான எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு…!

எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு ஒரு சூப்பரான குழம்பு ரெசிபி ஆகும். ஒரே மாதிரியான குழம்பு சாம்பார் வகைகள் அலுத்து விட்டது என்றால் கிராமத்து முறையில் இந்த எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு முயற்சி செய்து பாருங்கள். இதன் சுவை அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும். எண்ணெய் மிதக்கும் இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அத்தனை சுவையாக இருக்கும். வாருங்கள் காரசாரமான இந்த எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு கத்திரிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் காம்பின் மேல் பகுதியை மட்டும் நீக்கினால் போதும். இதன் அடிப்பகுதியில் நான்காக கீறிக் கொள்ளவும். உள்ளே பூச்சிகள் ஏதும் இல்லாத படி பார்த்துக் கொள்ளவும். கத்தரிக்காய் நறுக்கிய பிறகு தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இந்த எண்ணெயில் நாம் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கி எடுக்க வேண்டும். எண்ணெயில் கத்தரிக்காய் பாதி அளவு வெந்ததும் இதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து விடலாம்.

அனைவருக்கும் பிடித்தமான வேர்க்கடலை குழம்பு! இதுபோல செய்து பாருங்கள்…!

இப்பொழுது அதே எண்ணெயில் ஒரு கைப்பிடி அளவிற்கு தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்க்கவும். ஒரு கைப்பிடி அளவு தோல் உரித்த பூண்டு, சிறிய துண்டு இஞ்சி நன்கு பழுத்த ஒரு தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இவை வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் மூன்று தேங்காய் சில் சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். பிறகு இந்த வெங்காயம் தக்காளி மசாலாவை நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கால் கப் அளவு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் 4 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பிறகு கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு சீரகத்தூளையும் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கலந்து விட வேண்டும்.

நாம் ஏற்கனவே இந்த தக்காளி வெங்காயத்தை வதக்கி இருப்பதால் நீண்ட நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை லேசாக கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்ற வேண்டும். புளியை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதித்ததும் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும். குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொள்ளவும். இப்பொழுது நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை சேர்த்து மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். குறைவான தீயில் வைத்து குழம்பு நன்கு கொதித்ததும் இதனை அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் காரசாரமான கத்தரிக்காய் குழம்பு தயார்.