முட்டையை வைத்து செய்யும் ரெசிபிக்கள் எப்பொழுதும் சுவையாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சில குழந்தைகளுக்கு முட்டை அவ்வளவாய் பிடிக்காது. குறிப்பாக அதன் மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்து விடுவர். அதனால் குழந்தைகள் முட்டையை விரும்பி சாப்பிடும் வண்ணம் அதில் நிறைய காய்கறிகளும் சேர்த்து அருமையான முட்டை பணியாரத்தை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம் இதை செய்வது மிக மிக சுலபம்.
குஜராத்தி ஸ்பெஷல் காந்த்வி! சுவை நிறைந்த சிற்றுண்டி ரெசிபி…
முட்டை பணியாரம் செய்வதற்கு நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு இட்லி மாவை சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்கு கலந்து கொள்ளவும். இதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும். பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் கப் அளவு முட்டைகோஸ், ஒரு கைப்பிடி கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால் ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். சிறிய குழந்தைகளுக்கு சரியாக சாப்பிடத் தெரியாவிட்டால் வாயில் கடிப்படக்கூடும். இப்பொழுது இவை அனைத்தையும் நன்கு கலந்து வைத்து விடவும்.
ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து அதில் உள்ள குழிகளில் எண்ணெய் சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது கலந்து வைத்திருக்கும் முட்டை கரைசலை ஒவ்வொரு குழியிலும் பாதிக்கு மேல் இருக்குமாறு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் இதன் மேல் சிறு துளி எண்ணெய்கள் விட்டு மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் நன்கு வந்ததும் எடுத்து விடலாம். குழந்தைகளுக்கு சூடாக பரிமாறலாம்.
முட்டை வைத்து சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு… மறக்காம செய்து பாருங்கள்!
அவ்வளவுதான் சுவையான மாலை நேர சிற்றுண்டி முட்டைப் பணியாரம் தயார். இதனை சாதத்திற்கு சைடிஷ் ஆகவும் செய்து கொடுக்கலாம்.