சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் ஏற்ற டேஸ்டியான முட்டை கிரேவி..!

முட்டை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். குழந்தைகள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவுப் பொருள் முட்டை. இந்த முட்டையை ஒரே மாதிரி அவித்தோ இல்லை ஆம்லெட் போன்றோ செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு அலுத்து விடும். அதனால் இப்படி வித்தியாசமாக சுவையான முட்டை கிரேவி செய்து பாருங்கள். இது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவை நிறைந்ததாக இருக்கும். சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் இந்த முட்டை கிரேவி சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். வாருங்கள் இந்த சுவை நிறைந்த முட்டை கிரேவியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

முட்டை கிரேவி செய்வதற்கு முதலில் ஐந்து முட்டைகளை எடுத்து வேகவைத்து கொள்ளவும். வேகவைத்த முட்டைகளின் ஓடுகளை நீக்கி தனியாக வைத்து விடவும். மூன்று பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பழுத்த தக்காளிகளை நறுக்கி சேர்க்கவும். அதனுடன் ஒரு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து இதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுது நம்முடைய கிரேவிக்கு நல்ல கெட்டித்தன்மையை கொடுக்கும்.

முள்ளங்கி வைத்து இப்படி ஒரு பொரியலா வித்தியாசமாக இப்படி செய்யுங்கள் முள்ளங்கி பொரியல்…!

இப்பொழுது ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு பட்டை, நான்கு கிராம்பு, மூன்று ஏலக்காய், ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதங்கியதும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் காரத்திற்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

விருப்பப்பட்டால் இவற்றுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கரம் மசாலாவும் சேர்க்கலாம். மசாலாக்களின் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். இவற்றை வதக்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த விழுதை நன்கு வதக்கி கொதிக்க விட வேண்டும். எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் இதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து மூடி வைக்க வேண்டும். முட்டைகளை இருக்கும் பொழுது கத்தியால் ஆங்காங்கே லேசாக கீறி சேர்த்துக் கொள்ளலாம். கிரேவி நன்கு கொதித்து வந்ததும் இறக்கி விடலாம் அவ்வளவுதான் அட்டகாசமான முட்டையை கிரேவி தயாராகி விட்டது.