தீபாவளியன்று ஸ்பெஷல் பலகாரமாக இந்த தட்டை (எள்ளடை) செய்து பாருங்கள்…!

தீபாவளி நெருங்க தொடங்கிவிட்டது பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் என வாங்க தொடங்கி இருப்பார்கள். இந்த நிலையில் வீடுகளில் பலகாரம் செய்யும் வேலையும் களை கட்ட தொடங்கி இருக்கும். இந்த தீபாவளி அன்று ஸ்பெஷலாக தட்டை (எள்ளடை) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த முறையில் செய்து பாருங்கள். தென்னிந்தியாவின் பிரபலமான பலகார வகை தட்டை. அரிசி மாவில் செய்யும் இந்த தட்டை மொறுமொறுவென்று அனைவருக்கும் பிடித்த வகையில் சுவை நிறைந்ததாக இருக்கும். வாருங்கள் இந்த மொறுமொறு தட்டையை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஈஸியா செய்யலாம் இந்த தீபாவளிக்கு சுவையான ரவா லட்டு…!

தட்டை செய்வதற்கு முதலில் மூன்று கப் அளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதனை நன்கு சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த அரிசி மாவை வானலியில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் வறுத்துக் கொள்ள வேண்டும். அரை கப் அளவு பொட்டுக்கடலையை வெயிலில் காயவைத்து கொள்ளவும். பொட்டுக்கடலை காய்ந்ததும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதே போல் ஒரு கப் அளவு உளுந்தை வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்து மாவாக தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு மேஜை கரண்டி அளவு கடலைப்பருப்பை ஊறவைத்து கொள்ளவும்.

இப்பொழுது நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவோடு உளுந்த மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். நாம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, சிறிதளவு எள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். நடுத்தர அளவில் உள்ள நன்கு முற்றிய ஒரு தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் பாலை அடுப்பில் குறைவான தீயில் வைத்து சூடு செய்ய வேண்டும். பால் நுரை கூடி வரும்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கிய பாலை கலந்து வைத்திருக்கும் மாவில் ஊற்றி கரண்டியால் கிளறி விட வேண்டும். நன்கு கிளறிய பிறகு கையால் பிசையவும் தேங்காய் பால் போதவில்லை என்றால் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்த இந்த மாவை சிறுசிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து தட்டிக் கொள்ளவும். இப்பொழுது அகலமான அடி கனமான இருப்பு சட்டியில் தட்டை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் தட்டைகளை நான்கு அல்லது ஐந்தாக போட்டு பொரித்து எடுக்கவும். இருபுறமும் திருப்பி நன்கு சிவந்ததும் எடுத்துவிடலாம்.

தீபாவளி பலகாரத்திற்கு அனைவருக்கும் பிடித்த பாரம்பரியமான அதிரசம்…! இப்படி செய்து தீபாவளியை அசத்துங்கள்!

அவ்வளவுதான் சுவையான தட்டை தயாராகி விட்டது…!