உருளைக்கிழங்கு காலிபிளவர் கறி ஒரு காரம் நிறைந்த தாபாக்களில் கிடைக்கக்கூடிய ஒரு சைட் டிஷ் ரெசிபி ஆகும். இந்த உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கறி சப்பாத்தி, ரொட்டி, நாண், பரோட்டா என அனைத்து வகையான உணவுகளுக்கும் மிக சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் உடன் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த கறி செய்வதற்கு கொஞ்சம் கடினமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் அதே சமயம் சுவை நிறைந்ததாக இருப்பதால் ஒருமுறை செய்து சுவைத்து பார்த்துவிட்டு அடிக்கடி செய்வீர்கள்.
மூன்று விதமான நாண்! இனி ஹோட்டல்களில் கிடைக்கும் நாணை அதே சுவையில் வீட்டிலேயே செய்யலாம்!
இந்த உருளைக்கிழங்கு காலிபிளவர் கறி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய காலிஃப்ளவரை நறுக்கி வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும். நான்கு உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காலிபிளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த மசாலாக்கள் தடவியதை அப்படியே சிறிது நேரம் ஊற வைக்கவும். குறைந்தது பத்து நிமிடங்கள் ஆவது அப்படியே விட்டுவிட வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஊற வைத்த காய்கறிகளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த காய்கறிகளை தனியாக வைத்து விடவும். இப்பொழுது அதே கடாயில் மூன்று மேசை கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதனை தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்பு இதனுடன் மூன்று பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இதை இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பின்பு மூன்று தக்காளிகளை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இவை நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் இரண்டு தக்காளிகளை இதனுடன் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகளை சேர்த்த பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு ஒரு ஸ்பூன் கரம் மசாலா, சிறிதளவு கஸுரி மேத்தி சேர்த்து குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி விடலாம்.
அட்டகாசமான சுவையில் ஆலு பரோட்டா… இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான இந்த ஆலு பரோட்டா…!
அவ்வளவுதான் சுவை நிறைந்த காரசாரமான தாபா ஸ்டைலில் உருளைக்கிழங்கு காலிபிளவர் கறி தயாராகிவிட்டது!