மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி இப்படி செய்து பாருங்கள்…!

உருளைக்கிழங்கு சிப்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு நொறுக்குத் தீனியாகும். நொறுக்குத் தீனி மட்டும் இன்றி பல வகையான சாதங்களுக்கு சைட் டிஷ் ஆகவும் அட்டகாசமாக இருக்கும். தயிர் சாதம், ரசம் சாதம், தக்காளி சாதம், பூண்டு மிளகு சாதம் என அனைத்து வகையான சாதங்களுக்கும் இது அருமையான காம்பினேஷன். இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில் செய்யும் பொழுது சில சமயம் மொறுமொறுப்பாக இல்லாமல் மென்மையாகி விடும். அப்படி இல்லாமல் மொறுமொறுப்பாக அட்டகாசமான சுவையுடன் எப்படி வீட்டிலேயே உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு ஒரு கிலோ அளவு உருளைக்கிழங்கு எடுத்து அதன் தோலை சீவி கொள்ள வேண்டும். தோல் சீவிய உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்வதற்கு சீவக்கூடிய கருவி வைத்து மெல்லிசாக வட்ட வடிவில் சீவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதனை தண்ணீரில் இரண்டிலிருந்து மூன்று முறை நன்கு அலசிக் கொள்ளவும். அப்பொழுதுதான் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் நீங்கி உருளைக்கிழங்கு சிப்ஸ் நன்றாக இருக்கும்.

நறுக்கி அலசிய உருளைக்கிழங்கை ஒரு வெள்ளை துணியில் பரப்பி அதில் உள்ள ஈரப்பதத்தை துடைத்து எடுத்து விட வேண்டும். தனியாக ஒரு கிண்ணத்தில் இந்த சிப்ஸுக்கு தேவையான உப்புடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கடாயில் சிப்ஸ் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சீவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொறித்து எடுக்க வேண்டும். எண்ணெயில் உருளைக்கிழங்கை சேர்த்து சில நொடிகளுக்குப் பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் உப்பு கரைசலில் சிறிதளவு சேர்க்கவும். எண்ணெய் தெறிக்கும் என்ற பயம் வேண்டாம்.

இப்பொழுது உருளைக்கிழங்கு நன்கு பொரிந்து மொறு மொறுவென வந்ததும் இதனை எண்ணையில் இருந்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு விடலாம். இப்படி சீவி வைத்திருக்கும் அனைத்து உருளைக் கிழங்கையும் பொறித்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். பொறித்து எடுத்த உருளைக்கிழங்குடன் உங்களுக்கு விருப்பமான மிளகுத்தூள் அல்லது மிளகாய் தூள் இதில் ஏதாவது ஒன்றை தூவி குலுக்கி எடுத்தால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாராகி இருக்கும்.