முன்பெல்லாம் கோவில் அல்லது வேறு இடங்களுக்கு பயணம் செய்யும்பொழுது வீட்டில் இருந்தே கட்டுச்சாதம் எடுத்துச் சென்று விடுவார்கள். புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற சாதத்தை வீட்டிலேயே செய்து கையோடு எடுத்துச் சென்று விடுவார்கள். குடும்பத்தோடு அமர்ந்து கொண்டு சென்ற சாதத்தை ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்வர். இப்பொழுது என்னதான் ஆங்காங்கே உணவகங்கள் இருந்தாலும் இன்னமும் கட்டுசாதம் கொண்டு செல்லும் பழக்கத்தை பலர் பின்பற்றுகிறார்கள். அப்படி கொண்டு செல்லும் கட்டு சாதத்துடன் இப்படி தேங்காய் துவையல் செய்து கொண்டு செல்வார்கள். காரணம் தேங்காய் துவையல் கட்டு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் இது இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். ஒருமுறை இந்த தேங்காய் துவையலை நீங்கள் முயற்சித்துப் பார்த்தால் பின் அடிக்கடி செய்வீர்கள்.
கொழுப்பை கரைக்கும் கொள்ளு வைத்து அருமையான கொள்ளு துவையல்!
இதற்கு ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பதினைந்தில் இருந்து 20 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். இப்பொழுது கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.
எட்டு வரமிளகாய் சேர்த்து, மிளகாய் கருகி விடாமல் வதக்கவும். பின்பு உரித்து வைத்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கி வாசனை வரும் பொழுது துருவிய தேங்காயை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு புளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் வதங்கிய பிறகு சிறிது நேரம் ஆற வைக்கவும். இப்பொழுது மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்க வேண்டும். அதிக தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் காயவைத்து அரைத்த துவையலை போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி விடவும். நன்கு சுருண்டு வரும் பொழுது இறக்கி விடலாம். அரைத்த துவையல் சற்று நிறம் மாறி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது நீண்ட நேரத்திற்கு கெடாமல் நன்றாக இருக்கும்.
வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!
அவ்வளவுதான் சுவையான தேங்காய் துவையல் தயார்!