தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம், பருப்பு ரசம் என பலவகையான ரசங்களை நாம் சுவைத்திருப்போம், வீடுகளில் செய்திருப்போம். உங்களில் எத்தனை பேருக்கு கொங்கு நாட்டு ஸ்பெஷல் ரசமான தேங்காய் பால் ரசம் பற்றி தெரியும்? இந்த தேங்காய் பால் ரசம் மற்றொரு சுவை நிறைந்த ரசமாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவற்றை சரி செய்யக்கூடிய இந்த தேங்காய் பால் ரசம் பாரம்பரியமான ஒரு உணவு. வாருங்கள் இந்த தேங்காய் பால் ரசத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேங்காய் பால் ரசம் செய்வதற்கு அரை மூடி துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு அரைத்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது முதல் பால். மீண்டும் அதன் சக்கையோடு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து இரண்டாவது பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் இரண்டு டம்ளர் அளவு தேங்காய் பால் எடுக்கவும். இதை தனியாக வைத்து விடலாம்.
இனி ரசம் வைக்கும் பொழுது இந்த டிப்ஸ்களை ஃபாலோ செஞ்சு ரசம் வைத்து பாருங்கள்…!
இப்பொழுது மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சீரகம், முக்கால் ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக அரைத்த பிறகு ஐந்து பல் பூண்டை சேர்த்து அதையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து அதனை ஒரு கப் அளவு தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து அரை டீஸ்பூன் அளவிற்கு கடுகு மற்றும் உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இவற்றுடன் நன்கு பழுத்த ஒரு பெரிய தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் நன்றாக வதக்கி விட வேண்டும். தக்காளி வதங்கும் பொழுதே அரை ஸ்பூன் அளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கினால் தக்காளி சீக்கிரம் வதங்கி விடும். தக்காளி வதங்கியதும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து நாம் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த நிலையில் உப்பு சேர்க்கலாம். நாம் ஏற்கனவே தக்காளி வதங்கும் பொழுது உப்பு சேர்த்து இருக்கிறோம் அதை நினைவில் வைத்து சேர்க்கவும்.
இந்த ரசத்தை சூடா சாப்பிட்டு பாருங்க… சளி பிடித்த அடையாளமே தெரியாது… அற்புதமான கற்பூரவல்லி ரசம்!
தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கொதி வந்த பிறகு மிதமான தீயில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் முதல் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி நுரை கூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான கொங்கு நாட்டு ஸ்பெஷல் தேங்காய் பால் ரசம் தயார்.