தேங்காய் பர்பி இந்தியாவில் பாரம்பரியமான ஒரு இனிப்பு வகையாகும். இந்த தேங்காய் பர்பியை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக செய்வார்கள். ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையுடன் அட்டகாசமாக இருக்கும். பாரம்பரியமாக இந்த தேங்காய் பர்பியை தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் பால் இவற்றைக் கொண்டு செய்து வருகிறோம். இந்த தேங்காய் பர்பி ஒரு எளிமையாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். அதே சமயம் சுவை நிறைந்ததும் கூட. வாருங்கள் இந்த தேங்காய் பர்பியை எப்படி எளிமையாக சுவை நிறைந்ததாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேங்காய் பர்பி செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு துருவிய தேங்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் துருவலை எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு வானலியில் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் வறுபட்டவுடன் இதில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
சர்க்கரை கரைய மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்து நன்கு கிளற வேண்டும். சர்க்கரை உருகி கரைந்து விடும். இப்பொழுது கரைந்த சர்க்கரை தேங்காயோடு சேர்ந்து கட்டிப்படும் வரை இதனை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். தனியாக ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து நெய் உருகியதும் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு முந்திரியை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனை தனியாக வைத்து விடலாம்.
இப்பொழுது சர்க்கரை தேங்காயுடன் சேர்ந்து இறுகி வந்ததும் இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரியையும் சேர்த்து கிளறவும். இதனை ஒரு தட்டில் பரப்பி சமமான அளவிற்கு ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு தட்டி பரப்பி விட வேண்டும். இது சிறிது ஆறிய பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவில் நறுக்கி கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான வேறு நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பர்பி தயாராகி விட்டது.