இப்படி வித்தியாசமாக செய்து பாருங்கள்… முட்டை வைத்து முட்டை போண்டா சில்லி…!

முட்டையை வைத்து வழக்கம் போல இல்லாமல் வித்தியாசமாக ஒருமுறை முட்டை போண்டா சில்லி செய்து பாருங்கள். இந்த மழைக்காலத்தில் சூடான இந்த சில்லியை அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். மேலும் விருந்தினர்களுக்கு நீங்கள் வழக்கமாக செய்வது போல இல்லாமல் இப்படி முட்டை செய்து கொடுத்தால் அவர்களும் உங்களை வெகுவாக பாராட்டுவார்கள். அந்த அளவிற்கு சுவை நிறைந்த இந்த முட்டை போண்டா சில்லி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

முட்டை போண்டா சில்லி செய்வதற்கு முதலில் நான்கு முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஓடுகளை நீக்கி ஈரத்தன்மை இல்லாமல் துடைத்து விடவும். இப்பொழுது ஒரு பவுலில் முக்கால் கப் அளவிற்கு கடலை மாவு, கால் கப் பச்சரிசி மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இதனை கட்டிகள் ஏதும் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு கெட்டியாகவும் இல்லாமல் அதிக தண்ணீர் ஆகவும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் வேகவைத்து வைத்திருக்கும் முட்டைகளை நான்காக நறுக்கி அதனை இந்த மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் நன்கு சிவந்து பொரிந்ததும் இதனை எடுத்து விடலாம். அப்படியே சாப்பிட்டாலும் இந்த முட்டை போண்டா நன்றாக இருக்கும்.

இப்பொழுது இந்த முட்டை போண்டாவை சில்லி செய்வதற்கு ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு, மூன்று பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு நாம் பொறித்து வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து கிளறி விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான முட்டை போண்டா சில்லி தயாராகிவிட்டது…!