உணவகங்களில் விற்கப்படும் பரோட்டாவோடு கொடுக்கும் சால்னா அட்டகாசமான சுவையுடன் இருக்கும். பலரும் இந்த சால்னாவிற்கென்றே பரோட்டாவை வாங்குவது உண்டு. இதே சால்னாவை வீட்டில் முயன்று பார்த்தால் அதே சுவையில் பலருக்கும் வருவதில்லை. ஆனால் இனி கவலை வேண்டாம் உணவகங்களில் விற்கும் அதே சால்னா சுவையில் வீட்டிலேயே சூப்பரான சிக்கன் சால்னாவை இனி நீங்களே செய்ய முடியும்.
அடடா…! காரசாரமான பெப்பர் சிக்கன்! அடுத்த முறை சிக்கன் எடுத்தால் இப்படி செய்து பாருங்கள்.
இந்த சிக்கன் சால்னா செய்வதற்கு கறி பகுதிகளை விட கோழியின் எலும்பு பகுதிகள், தோல் பகுதிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்தால் இந்த சிக்கன் சால்னா சுவையாக இருக்கும். எலும்புகளிலும் உள்ள ஜூஸ் மற்றும் தோல்களில் உள்ள கொழுப்புகள் குழம்பில் நன்கு இறங்கி நல்ல சுவை கொடுக்கும். எனவே சிக்கன் சால்னாவிற்கு இது போன்ற பகுதிகளை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும் அரை கிலோ அளவு எலும்பு பகுதிகளை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த சிக்கன் சால்னாவிற்கு நாம் வறுத்து அரைத்த மசாலாவை பயன்படுத்த போகிறோம். எனவே ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு துண்டு பட்டை, மூன்று ஏலக்காய், 4 கிராம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கசகசா, அரை கப் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்கு வறுப்பட்ட பிறகு இதனை ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இரண்டு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கி அதை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது, மூன்று பச்சை மிளகாய் சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆனதும் இதனோடு ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு இரண்டு தக்காளியை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் தக்காளி நன்கு மென்மையானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கோழிக்கறியை இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.கறி ஓரளவு நிறம் மாறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் விட வேண்டும். நான்கு முதல் ஐந்து விசில் வந்த பிறகு இதனை திறந்து பார்க்க சுவையான சால்னா தயாராகி இருக்கும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இதனை பரிமாறலாம்.
கிராமத்து ஸ்டைலில் ஆவி பறக்க மட்டன் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க!
இந்த சால்னா பரோட்டா சப்பாத்தி பூரி இட்லி தோசை என அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.