பலருக்கும் பிடித்தமான உணவு சிக்கன் பிரியாணி. ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன் பிரியாணி இல்லை என்றால் பலருக்கும் அந்த வாரம் நிறைவடைந்தது போல் இருக்காது. சிக்கன் பிரியாணி பலவிதமாக செய்யலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பிரியாணி செய்வார்கள். இப்பொழுது நாம் கடைகளில் வாங்கும் பிரியாணி மசாலா பயன்படுத்தாமல் நாமே வறுத்து அரைத்த மசாலா சேர்த்து பிரியாணி செய்ய போகிறோம். இப்படி மசாலாக்கள் அரைத்து பிரியாணி செய்து பாருங்கள் இதன் சுவை வித்தியாசமாக அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் சுவையான சிக்கன் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!
சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் அரை மணி நேரம் முன்னதாக இரண்டு கப் அளவு பாஸ்மதி அரிசியை ஊறவைத்து கொள்ள வேண்டும். பிறகு மசாலாவை தயார் செய்து கொள்வோம். ஒரு வாணலியில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் ஒரு பிரியாணி இலை, மூன்று ஏலக்காய், 4 கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை, 1 நட்சத்திர சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் முழு மல்லி, அரை ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனை வறுத்த பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி தான் நாம் பிரியாணிக்கு பயன்படுத்தக்கூடிய பிரியாணி மசாலா.
இப்பொழுது ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இவை சூடானதும் ஒரு பட்டை இலை, மூன்று ஏலக்காய், 3 கிராம்பு, சிறிதளவு பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கால் கிலோ அளவு வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது, ஒரு ஸ்பூன் பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இவற்றோடு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரைத்த பிரியாணி மசாலா, இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 150 கிராம் அளவு பழுத்த தக்காளியை சேர்த்து அதையும் மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி மென்மையாகி மசாலாக்களின் பச்சை வாசனை போனதும் இவற்றோடு ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் ஒரு கைப்பிடி புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுத்தம் செய்த அரை கிலோ சிக்கனை சேர்த்து நன்கு மசாக்கலாக்களுடன் வதக்கிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்திருந்த பாஸ்மதி அரிசியும் சேர்த்து கலந்து விட வேண்டும். இந்த நிலையில் உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு சரியாக இருப்பின் குக்கரை மூடி விசில் போட வேண்டும். மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை வைக்கவும். விசில் வந்த பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குக்கரை திறந்து பார்த்தால் சிக்கன் பிரியாணி தயாராக இருக்கும்.
அட.. என்ன சுவை! பிரியாணியுடன் சாப்பிட அட்டகாசமான எண்ணெய் கத்திரிக்காய்!
அவ்வளவுதான் சூடான சுவையான சிக்கன் பிரியாணி தயார்!