செட்டிநாட்டு ஸ்பெஷலான இனிப்பு வகை உக்கரா செய்வது எப்படி?

செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பல சிறப்புக்களை உடையது என்றாலும் குறிப்பாக உணவு மற்றும் சமையலுக்கு பெயர் பெற்றது. அந்த செட்டிநாட்டில் விதவிதமான பலகாரங்கள் மற்றும் உணவு வகைகள் சமைக்கப்படும்.

அப்படி செட்டிநாட்டில் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு தான் உக்கரா என்பதாகும். உக்கரா செய்வதற்கு மிக அதிக பொருட்கள் தேவை இல்லை வீட்டில் உள்ள எளிமையான பொருட்களைக் கொண்டே செய்யலாம். ஆனால் இதன் சுவை மிக அற்புதமாக இருக்கும்.

இந்த ஆடி வெள்ளி அன்று பூஜை நெய்வேத்தியத்திற்கு பாசிப்பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

பார்ப்பதற்கு அல்வா போன்ற தன்மையுடையதாக தெரிந்தாலும் இது உண்மையில் அல்வா அல்ல. செட்டிநாட்டு திருமணங்கள், விசேஷங்கள் போன்ற அனைத்து முக்கிய நிகழ்விலும் காலை உணவில் கட்டாயம் இந்த உக்கரா இடம் பிடித்து விடும். புரதம் நிறைந்த பருப்பு, நெய் போன்ற பொருட்கள் சேர்த்து செய்வதால் இது உடல் நலத்திற்கும் நன்மை தரக்கூடியது.

உக்கரா தயாரிக்கும் முறை:

ஒரு கப் பாசிப்பருப்பை அதிகம் குழையாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று மேஜை கரண்டி தேங்காய் பூ, மற்றும் கால் கப் அளவு பச்சரிசி மாவு இரண்டையும் குறைந்த தீயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து முக்கால் கப் அளவுக்கு ரவையை நன்கு சிவக்க வறுத்து கொள்ள வேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீரை சுட வைத்து வறுத்த ரவையோடு ஊற்றி கட்டிகள் ஏதும் இல்லாதவாறு கட்டி படாமல் கிளற வேண்டும்.

இப்பொழுது ஏற்கனவே வேகவைத்து இருக்கும் பாசிப்பருப்பை இந்த ரவையோடு சேர்த்து கிளறுங்கள். 400 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதனை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

இந்த வெல்லப்பாகையும் இப்பொழுது ரவையோடு சேர்த்து கிளற வேண்டும். அனைத்தும் சேர்ந்து இறுகி வரும் பொழுது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற வேண்டும் பின் பச்சரிசி மாவை தூவி கிளறி கெட்டியானதும் தேங்காய்ப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நாவில் எச்சில் ஊறச் செய்யும் கேரட் அல்வாவில் இத்தனை நன்மைகளா…!

இப்பொழுது தனியாக நெய்யில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து இந்த ரவையோடு சேர்த்துக் கொள்ளவும் இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா தயார்…!