ரசத்தில்தான் எத்தனை வகையான ரசம். எலுமிச்சை ரசம் புளி ரசம் தக்காளி ரசம் பருப்பு ரசம் மிளகு ரசம் என பல வகையான ரசங்கள் சைவ உணவில் உண்டு. ஒவ்வொரு ரசத்திற்கும் தனித்துவமான சுவை உண்டு. தனித்துவமான சுவையுடன் அனைவருக்கும் விரும்பும் வகையில் இருக்கக்கூடிய ஒரு ரசம்தான் செட்டிநாட்டு ரசம். கமகமக்கும் இந்த ரசத்தின் சுவை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிடித்தமான உணவாக விரைவிலேயே மாறிவிடும். பிறகு அனைவரும் உங்களிடம் அடிக்கடி இந்த ரசத்தை செய்யச் சொல்லி கேட்கும் அளவிற்கு இதன் சுவை இருக்கும்.
இந்த செட்டிநாட்டு ரசம் செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு பருப்பு வேகவைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பருப்பு வேகவைத்த தண்ணீரில் ஒரு நெல்லிக்காய் அளவு புளி, மற்றும் தேவையான அளவு உப்பு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். புளி மற்றும் உப்பை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு நன்கு பழுத்த பெரிய தக்காளியை சேர்த்து கரைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
இதனுடன் ஒரு கரண்டி அளவு பருப்பை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு வர மிளகாய் ஆகியவற்றை இடிக்கும் உரலில் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி சேர்க்கவும். பிறகு 5 பல் பூண்டை தட்டி இந்த பருப்பு தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கைகளால் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் இரண்டு ஸ்பூன் காய வைத்து அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். இவை அனைத்தையும் தாளித்த பிறகு கரைத்து வைத்திருக்கும் ரசத்தை இதனுடன் ஊற்றி கொதிக்க விட வேண்டும். ரசத்தை நீண்ட நேரம் கொதிக்க வைத்து விடக்கூடாது. நுரை கூடி வரும் பொழுது இறக்கி விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி மூடி வைத்து விடவும்.
அவ்வளவுதான் வாசனை நிறைந்த செட்டிநாட்டு ரசம் தயார். காரம் தேவைப்பட்டால் மிளகு இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்.