செட்டிநாட்டு ஸ்டைலில் பாசிப்பயறு தண்ணீர் குழம்பு இப்படி வைத்து பாருங்கள்…!

பாசிப்பயறு தண்ணீர் குழம்பு என்பது சாம்பார் போன்றோ குழம்பு போன்றோ கெட்டியாக இல்லாமல் தண்ணீராக இருக்கக் கூடிய ஒரு தண்ணீர் குழம்பு ஆகும். செட்டிநாட்டு பகுதிகளில் திருமணம் போன்ற விசேஷ நிகழ்வுகளின் பொழுது பெரும்பாலும் இந்த குழம்பு இடம் பிடித்து விடும். இந்த தண்ணீர் குழம்பை நாம் வீட்டிலும் சுவையாக செய்ய முடியும். வழக்கமான குழம்பு அல்லது சாம்பார் வகை போன்று இல்லாமல் வித்தியாசமாக முயற்சி செய்ய விரும்புபவர்கள் இந்த பாசிப்பயறு தண்ணீர் குழம்பை முயற்சி செய்து பார்க்கலாம்.

அருமையான அரிசி பருப்பு சாதம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு செய்து கொடுத்து அசத்திடுங்க!

பாசிப்பயறு தண்ணீர் குழம்பு செய்வதற்கு முதலில் 200 கிராம் அளவு பாசிப்பயறை வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த பிறகு பாசிப்பயறை தண்ணீர் விட்டு அலசி இதனை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். இதனுடன் ஒரு கப் அளவு சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு தக்காளியையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். குக்கரில் வேகவைக்க நினைப்பவர்கள் ஒரு விசில் மட்டும் விட்டு வேக வைக்கலாம் இதனை அதிகம் குழைத்து விடக் கூடாது.

பாசிப்பயறு வெந்ததும் இதனுடன் கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும் சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பை கரைத்து சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் நான்கு பல் பூண்டை தோலோடு ஒன்றிரண்டாக தட்டி இதனுடன் சேர்க்கவும்.

தனியாக ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம், சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து இதனை குழம்போடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கலாம் இந்த குழம்பு கெட்டியாக இல்லாமல் தண்ணீராக இருக்க வேண்டும் அதனால் கொதிக்கும் பொழுதே அதற்கு தகுந்தாற்போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான் சுவையான பாசிப்பயறு தண்ணீர் குழம்பு தயாராகி விட்டது…!