பார்க்கும்பொழுதே நாவில் எச்சில் ஊற செய்யும் பாம்பே சட்னி…! டிபன் வகைகளுக்கு அட்டகாசமான காம்பினேஷன்!

இட்லி, தோசை, உப்புமா, பூரி, சப்பாத்தி என அனைத்து வகையான டிபன் வகைகளுக்கும் ஏற்ற அருமையான ஒரு சட்னி வகை தான் பாம்பே சட்னி. வழக்கமான சட்னி போன்று இல்லாமல் இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதை செய்வதும் மிக மிக சுலபம். இந்த பாம்பே சட்னியை ஒரு முறை வைத்து விட்டால் நீங்கள் அடிக்கடி செய்யும் அளவிற்கு இதன் சுவை இருக்கும். இனி வழக்கமான சட்னிகள் போல இல்லாமல் வித்தியாசமான இந்த பாம்பே சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இட்லி, தோசைக்கு அருமையான துவரம் பருப்பு சட்னி…!

பாம்பே சட்னி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் மூன்று பச்சை மிளகாய் நீளவாக்கில் கீரி கொள்ளவும். ஒரு பழுத்த தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கிய பிறகு 2 உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து இதனுடன் சேர்த்து கிளறி விடவும். இரண்டு மேஜை கரண்டி அளவு கடலை மாவை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு தயிர் சேர்த்தும் கரைத்துக் கொள்ளலாம்.

கடலை மாவை கரைத்த பிறகு இதனை வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளியுடன் ஊற்றி கிளறி விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கொதிக்க விடவும். சட்னி இறுகி கெட்டியான பின்னர் கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!

அவ்வளவுதான் சுவையான பாம்பே சட்னி தயார்!