பாகற்காய் கசப்புத் தன்மை நிறைந்த ஒரு காய் வகை ஆகும். இதன் கசப்புச் சுவையினால் பலரும் பாகற்காயை விரும்பி உண்ணாமல் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் இந்த பாகற்காய் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று. உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்களும், விட்டமின்களும் இதில் அதிக அளவு நிறைந்துள்ளது. உடலில் நோய் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரலை வலுப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக வைத்திட உதவுகிறது. இதய நோயிலிருந்து காத்திட உதவுகிறது. இந்த பாகற்காய் வைத்து எப்படி சுவையான பாகற்காய் மசாலா செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பாகற்காய் மசாலா செய்வதற்கு முதலில் கால் கிலோ அளவு பாகற்காயை எடுத்து சுத்தம் செய்து இதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 10 பல் பூண்டை தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும் இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் 2 தக்காளி ஆகியவற்றையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை காயவைத்து அதில் நான்கு மேஜை கரண்டி எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நன்கு வதக்கவும். பூண்டின் பச்சை வாசனை மாறி வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையான பிறகு பாகற்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். பாகற்காய் வதங்கும் பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான வெண்டைக்காய் மண்டி இப்படி செஞ்சு பாருங்க!
சிறிதளவு புளி கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவை நன்கு கொதித்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். பாகற்காய் சுருண்டு வந்ததும் இறக்கி விடலாம். அவ்வளவுதான் பாகற்காய் மசாலா தயாராகி விட்டது…!