அனைத்து சாதத்திற்கு ஏற்ற அருமையான பேபி உருளைக்கிழங்கு ப்ரை…!

உருளைக்கிழங்கில் ஒரு வகை தான் பேபி உருளைக்கிழங்கு. இந்த பேபி உருளைக்கிழங்கு அளவில் மிக சிறியதாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கை வேக வைத்து நறுக்காமல் முழுவதுமாக அப்படியே போட்டு செய்யக்கூடிய உருளைக்கிழங்கு ப்ரை வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும். இதற்கான மசாலாவை நாம் அரைத்து சேர்த்தால் கூடுதல் சுவையோடு இருக்கும். இந்த பேபி உருளைக்கிழங்கு ப்ரை செய்வது மிக மிக சுலபம் வாருங்கள் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வாவ்! காரசாரமான உருளைக்கிழங்கு காலிபிளவர் கறி…! தாபா ஸ்டைலில் வீட்டில் செய்வது எப்படி?

பேபி உருளைக்கிழங்கு ப்ரை செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு உருளைக்கிழங்கை கழுவி உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வெந்த பிறகு தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் கால் ஸ்பூன் வெந்தயம், ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய், ஒரு ஸ்பூன் மல்லி, 1 1/2 ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு வறுப்பட்டதும் இதனை ஆற வைத்துக் கொள்ளவும். மசாலாக்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி மற்றும் பூண்டை எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் வேகவைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வேக வைக்கும் பொழுது நாம் உப்பு சிறிது சேர்த்திருக்கிறோம். மீண்டும் உப்பு தேவைப்பட்டால் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் பொடியை தூவி உருளைக்கிழங்கை நன்கு வதக்கி கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு எண்ணெயில் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தலை தூவி இறக்கிவிடலாம். இதன் மேல் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழைந்தும் பரிமாறலாம்.

கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல்.. அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு பொரியலை இனி இப்படி செய்யுங்க!

அவ்வளவுதான் சுவையான மொறுமொறுவென பேபி உருளைக்கிழங்கு வறுவல் தயாராகிவிட்டது…!