சுவையான பேபி கார்ன் மசாலா.. உணவகங்களில் கிடைக்கும் சுவையில் இப்படி செய்து பாருங்கள்…!

பேபி கார்ன் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்திட உதவி புரிகிறது. மேலும் இந்த பேபி கார்ன் சரும ஆரோக்கியத்திலும் மிகச் சிறந்த பங்களிப்பை தருகிறது. காரணம் இதில் சரும ஆரோக்கியத்திற்கு உகந்த விட்டமின் சி நிறைந்து உள்ளது. மேலும் உடலுக்குத் தேவையான துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. இப்படி பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த பேபி கார்ன் வைத்து எப்படி சுவையான மசாலா செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பேபி கார்ன் மசாலா செய்வதற்கு முதலில் 400 கிராம் அளவு பேபி கார்ன் எடுத்து அதனை நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பேபி கார்ன் அதில் சேர்க்க வேண்டும். இதனை மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் அதிகமான தீயில் வைத்து வேக விடவும். பேபி கார்ன் பாதி அளவு வெந்ததும் இதனை வடிகட்டி எடுத்து விடலாம். இந்த மசாலாவிற்கு 12 முந்திரி பருப்புகளை ஊறவைத்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் மூன்று தக்காளி பழங்களையும் நறுக்கி மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலபமா செய்யலாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான கொத்தமல்லி சாதம்!

பிறகு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெயுடன் சிறிது நெய்யும் பயன்படுத்தலாம். பிறகு அரை ஸ்பூன் சீரகம், 2 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு துண்டு பட்டை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எண்ணெயில் வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இப்பொழுது மசாலா சேர்க்கலாம்.

அரை ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை எண்ணெயில் சிறிது நேரம் வதக்கி நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளியில் உள்ள தண்ணீர் வற்றி பச்சை வாசனை போகும் வரை இதனை வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் பேபி கார்ன் சேர்த்து அதில் மசாலாக்கள் படும் படி கிளறி விட வேண்டும்.

இனி உருளைக்கிழங்கு மசாலா இப்படி ஈஸியா செய்து பாருங்கள்…!

இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு இதனை மூடி போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பேபி கார்ன் முழுவதுமாக வெந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுதை சேர்த்து கொள்ளவும். வாசனைக்கு ஒரு டீஸ்பூன் அளவு கரம் மசாலாவையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக சிறிதளவு கசூரி மேத்தியை சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் சுவையான சத்துக்கள் நிறைந்த பேபி கார்ன் மசாலா தயார்.