காலை மற்றும் இரவு உணவுக்கு ஆப்பம் அருமையாக இருக்கும். ஆப்பம் செய்வது கடினமானது என்று பலரும் அதை முயற்சிப்பதில்லை. ஆனால் ஆப்பமும் தோசை போல நாம் எளிமையாக செய்யலாம். சற்று சிரத்தை எடுத்தால் போதும் சுவையான ஆப்பத்தை தயார் செய்யலாம். இந்த ஆப்பத்திற்கு தேங்காய் பால் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இந்த ஆப்பம் மற்றும் தேங்காய் பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான ஆப்பம் மற்றும் தேங்காய் பாலை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சுலபமா செய்யலாம் அவல் வைத்து சுவையான அவல் தோசை…! செய்வது எப்படி?
ஆப்பம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி மற்றும் ஒரு கப் அளவு புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அரை கப் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் இரண்டையும் தனியே ஊற வைக்கவும். நாம் ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தும் இரண்டு மணி நேரம் ஊற வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் முதலில் உளுந்து மற்றும் வெந்தயம் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். உளுந்து மற்றும் வெந்தயம் இரண்டையும் கிரைண்டரில் சேர்த்து அரைக்க ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் அரிசியையும் சேர்த்து அரைக்கவும். இவற்றை நன்கு மை போல அரைக்க வேண்டும். இப்பொழுது இந்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் இரவே அரைத்து வைத்தால் தான் மறுநாள் காலை ஆப்பம் ஊற்றலாம்.
இப்பொழுது தேங்காய் பால் எடுப்பதற்கு நன்கு முற்றிய ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து அதன் சக்கையை வடிகட்டி பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பாலில் அரை கப் அளவு சர்க்கரையை சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பாலை குறைவான தீயில் அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடு ஏறியதும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து எண்ணெயை துணியால் தடவிக் கொள்ளவும். ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி ஆப்ப சட்டியை இரு பக்கமும் பிடித்துக் கொண்டு சுற்றவும். இவ்வாறு சுற்றினால் மாவு ஓரங்களை லேசாகவும் நடுவில் கனமானதாகவும் இருக்கும். இதனை மூடி வைத்து சில நிமிடங்களில் திறந்தால் ஆப்பம் வெந்திருக்கும். இப்பொழுது இந்த ஆப்பத்தை சூடாக எடுத்து தேங்காய் பால் ஊற்றி சாப்பிடலாம். அவ்வளவுதான் சுவையான ஆப்பம் மற்றும் தேங்காய்ப்பால் தயார்!