ஆந்திரா ஸ்டைல் சாப்பாடு என்றாலே காரசாரம்தான் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும். பெரும்பாலான உணவகங்களில் ஆந்திரா மீல்ஸிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆந்திரா ஸ்டைலில் சாம்பார் வைப்பது என்பது ஏதோ வித்தியாசமான ஒன்றாக பலரும் நினைக்க வேண்டாம். அதேபோன்ற சாம்பாரை நாமும் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் ஆந்திரா ஸ்டைலில் அட்டகாசமான சாம்பாரை எப்படி எளிமையாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வாயில் வைத்ததும் கரையும் பீட்ரூட் அல்வா இப்படி செய்து பாருங்கள்…!
இந்த சாம்பார் செய்ய அரை கப் அளவு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தண்ணீரில் நன்றாக அலசி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த துவரம் பருப்பை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு தக்காளி, ஆறு பல் பூண்டு, அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வைக்கவும்.
இப்பொழுது ஒரு கடாயில் ஒரு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம், மூன்று காய்ந்த மிளகாய், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு கறிவேப்பிலையையும் சேர்க்கவும். பிறகு 20ல் இருந்து 25 சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே இரண்டு பச்சை மிளகாய் களையும் சேர்த்து வதக்கவும்.
விரத நாட்களில் வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்…!
வெங்காயம் வதங்கியதும் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து வதக்கலாம். முருங்கைக்காய், கேரட், பூசணிக்காய், சௌசௌ, கத்தரிக்காய் என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு இதற்கு தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியாத் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்த விட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இதனை மூடி போட்டு சிறிது நேரம் காய்கறிகளை வேக விடவும்.
காய்கறிகள் பாதி வெந்ததும் புளிக்கரைசலை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் முழுமையாக வெந்த பிறகு நாம் வேகவைத்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். இந்த நிலையில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். சாம்பார் நன்கு கொதித்த பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி சூடான சாதத்திற்கு பரிமாறலாம் அவ்வளவுதான் சுவையான ஆந்திரா சாம்பார் அட்டகாசமாக தயாராகி விட்டது.