கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து தித்திப்பிற்கு பஞ்சமே இல்லாத ஹெல்தியான சம்பா ரவை அல்வா ரெசிபி!

பொதுவாக ரவை வைத்து உப்புமா செய்தால் மட்டுமே நம் வீட்டில் உள்ள பலருக்கு பிடிக்காது. ஆனால் அதை ரவா வைத்து கிச்சடி, ரவா கேசரி, ரவா பொங்கல் என விதவிதமாக செய்து கொடுக்கும் பொழுது திருப்தியாக சாப்பிடுவார்கள். இந்த முறை சாதாரணமாக இல்லாமல் சம்பா ரவை வைத்து தித்திப்பாக சாப்பிடும் விதத்தில் நெய் சேர்த்து சுவையான அல்வா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

ஒரு அடி கனமான கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முந்திரி பருப்பு, பத்து கருப்பு திராட்சை சேர்த்து பொன்னிறமாக பொரிந்ததும் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளலாம். கடாயில் மீதம் இருக்கும் நெய்யுடன் ஒரு கப் சம்பா ரவை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

மிதமான தீயில் குறைந்தது மூன்று நிமிடம் சம்பா ரவையை நெய்யோடு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ரவை வறுத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் மூன்று கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மூன்று நிமிடம் ரவை நன்கு வறுத்த பிறகு ஒரு கப் ரவைக்கு மூன்று கப் வீதம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி கொதிக்கும் தண்ணீர் மூன்று கப் ரவையோடு சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். நன்கு கலந்து மூடி போட்டு மூன்று நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். மூன்று நிமிடம் கழித்து திறந்து பார்க்கும் பொழுது தண்ணீர் நன்கு வற்றி ரவை வெந்து கெட்டி பதத்திற்கு வந்திருக்கும்.

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஸ்பெஷல் தக்காளி கோஜி! காரசாரமான அசத்தல் ரெசிபி இதோ…

இந்த நேரத்தில் ஒரு கப் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்து வரும் நேரத்தில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது வாசனைக்காக ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக நான் முதலில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான சம்பா ரவை அல்வா தயார். விசேஷ நாட்களில் இது போன்ற இனிப்பு வகைகளை எளிமையான முறையில் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் மகிழலாம்.