வீட்டில் விதவிதமாக பல ரெசிபிகள் செய்து வந்தாலும் சில வகையான உணவு வகைகள் நம் கடைகளில் தான் வாங்கி வருவது வழக்கம். அதில் ஒன்றுதான் கேக். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த கேக்கை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம். ரவா வைத்து கேக் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தயிர், இரண்டு கப் சர்க்கரை தூள், ஒரு கப் எண்ணெய் சேர்த்து நன்கு கட்டிகள் விழாத வண்ணம் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் இரண்டரை கப் ரவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வறுத்த ரவை சேர்த்துக் கொண்டால் சுவை அருமையாக இருக்கும்.
ரவை சேர்த்தவுடன் இந்த பாத்திரத்தை ஒரு மூடி போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து இந்த கலவையுடன் நான்கு சொட்டு வெண்ணிலா எசன்ஸ், அரை கப் மைதா மாவு, ஒரு தேக்கரண்டி மில்க் பவுடர், ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஒரு கப் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது கேக் செய்வதற்கான மாவு தயாராக உள்ளது. இதை நாம் கேக் செய்யும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். 10 நிமிடத்திற்கு முன்னதாகவே பிரிகேட் செய்த ஓவனில் 200 டிகிரி செல்சியஸில் 30 முதல் 35 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா கேக் தயார்.
ஓவன் இல்லாத பட்சத்தில் குக்கரில் இதை சமைத்துக் கொள்ளலாம். குக்கரின் அடிப்பகுதியில் கல்லுப்பு சேர்த்து பத்து நிமிடம் சூடுபடுத்த வேண்டும். அதன் மேல் ஒரு சிறிய வட்ட வடிவு தட்டு அல்லது ஸ்டாண்ட் வைத்து விட்டு அதன் மேல் நம் கலந்து வைத்திருக்கும் ரவா கேக் கலவையை வைத்து குக்கரை மூடி போட்டு மிதமான தீயில் 30 முதல் 35 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
சமைக்கத் தெரியாதவர்கள் கூட சமையல் அறையில் ராணியாக மாற வேண்டுமா? அசத்தலான பத்து சமையல் டிப்ஸ்…
30 நிமிடம் கழித்து ஒரு குச்சியை வைத்து கேக்கின் நடுவில் குத்தி பார்க்கும் பொழுது குச்சியில் கேக் மாவு ஒட்டாமல் தனியாக வந்தால் கேக் நன்கு வந்துள்ளது என அர்த்தம்.
35 நிமிடம் கழித்து தயாராக இருக்கும் ரவா கேக்கை நமக்கு விருப்பமான விதத்தில் துண்டுகளாக மாற்றி குழந்தைகளுடன் மகிழ்வித்து சாப்பிடலாம்.