தினம் தினம் விதவிதமான குழம்பு சமைக்க வேண்டும் என்பதே இல்லத்தரசிகளின் பெரிய குழப்பங்களில் ஒன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பு வைத்தால் நாளை என்ன குழம்பு வைப்பது.. தினமும் வித்தியாசமான குழம்புகள் வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள நபர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் என்ன சமைப்பது என்பது பலரின் குழப்பமாக இருக்கும். வித்தியாசமாகவும் சமைக்க வேண்டும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும் என்பது பெண்களின் விருப்பம். அந்த வகையில் ஒரு முறை மதுரை ஸ்பெஷல் கழனி ரசம் வைத்து பாருங்கள். அசத்தும் இந்த சுவை வீட்டில் உள்ள அனைவரையும் எளிதில் திருப்திப்படுத்தும். இந்த ரசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
நம் சாதம் செய்ய தயார் செய்யும் பொழுதே அரிசி கலந்த தண்ணீரை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் நல்ல பெரிய அளவு எலுமிச்சை பழ அளவு புளி சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து காய்ந்த வத்தல், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஐந்து பல் வெள்ளை பூண்டுவை இடித்து சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பெருங்காயத்தூள் சேர்த்த அரை நிமிடம் கழித்து நம் ஊற வைத்திருக்கும் புளி கரைசலை சேர்த்துக் கொள்ளலாம்.
நாம் சேர்த்த அளவு புளி கரைசல் தண்ணீரில் முக்கால் பாகமாக மாறும் அளவிற்கு நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த ரசம் அரிசி கலைந்த தண்ணீர் வைத்து செய்வதால் சுவை சற்று வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும்.
எளிமையான முறையில் ஐந்தே நிமிடத்தில் தயாராகும் இந்த ரசம் சூடான சாதத்துடன் அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு மசால் வைத்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி அனைவருக்கும் கிடைக்கும்.