புளி இல்லாமல் ரசமா? ஐந்தே நிமிடத்தில் பொரிச்ச ரசம் தயார் செய்யலாம்!

வாய்வு தொல்லை, அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்ற பல உடல் உபாதைகளுக்கு வீட்டில் தயார் செய்யும் ஒரே அருமருந்து ரசம் தான். இந்த ரசத்தை நாம் சூப்பாகவோ அல்லது சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது உடலில் உள்ள அசதி நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும். மேலும் எளிமையாக செரிமானமாக கூடிய உணவாகவும் இந்த ரசம் அமையும். அந்த வகையில் ரசம் செய்வதற்கு புளிப்புச் சுவை அதிகம் தேவை. . அதற்காக நாம் புளி பயன்படுத்துவது வழக்கம். இந்த முறை புலி சேர்க்காமல் ஐந்தே நிமிடத்தில் பொரிச்ச ரசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழங்கள், ஒரு சிறிய துண்டு கட்டிப் பெருங்காயம், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க விட வேண்டும்.

ஐந்து முதல் பத்து நிமிடத்தில் தக்காளி ஒன்றும் பாதியாக நன்கு வெந்திருக்கும். அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

அடுத்ததாக இதனுடன் காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து பொரிய விட வேண்டும். ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு இதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இறுதியாக இதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம். இந்த மசாலாக்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவோ பொடி வகைகள் பார்த்திருப்போம்! வாங்க ஒரு முறையாவது இந்த நல்ல காரம் பொடி ட்ரை பண்ணலாம்!

இப்பொழுது தக்காளி நன்கு வெந்ததும் நம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விட வேண்டும்.
ரசம் நன்கு நுரைத்து பொங்கி வரும் பொழுது கைப்பிடி அளவு மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கிக் கொள்ளலாம். இப்பொழுது மற்றொரு கடாயில் இரண்டு நெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, இரண்டு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன்
சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது சுவையான புளி சேர்க்காத ரசம் தயார்.

Exit mobile version