நம் வீடுகளில் பொதுவாகவே இட்லி பொடி எப்பொழுதும் தயாராக இருக்கும். அதிலும் சில நேரங்களில் சுவைக்கு மட்டுமில்லாமல் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக முருங்கைக்கீரை பொடி, வல்லாரை பொடி என அடுக்கிக்கொண்டே போகலாம். அதுவும் சூடான சாதத்துடன் விரும்பி சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு பருப்பு பொடி என இட்லி பொடியின் வகைகள் மட்டும் பல உள்ளது. இதில் குறைந்தது இரண்டு மூன்று வகையான பொடிகள் நம் வீட்டில் கட்டாயமாக இருக்கும். சட்னி, சாம்பார் போன்ற குழம்பு வகைகள் சமைக்க முடியாத நேரங்களில் இந்த பொடி தான் நமக்கு கை கொடுக்கும். அந்த வகையில் சற்று வித்தியாசமான சுவையில் சத்து நிறைந்த நல்ல காரம் பொடி செய்வதற்கான ரெசிபி இதோ…
ஒரு அகலமான கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் பயன்படுத்தினால் வாசனையாக இருக்கும். எண்ணெய் சூடானதும் அரைக்க கருப்பு உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மேல் தோல் நீக்கப்படாத உளுந்து.
அடுத்ததாக உளுந்து எடுத்துக் கொண்ட அதே கப்பிற்கு கால் கப் தனியா, 20 முதல் 25 காய்ந்த வத்தல், கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும்.
கடாயில் சேர்த்த பொருட்கள் அனைத்தும் பாதி வறுபட்டதும் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிய எலுமிச்சை பல அளவு புளி, மூன்று தேக்கரண்டி சீரகம், முக்கால் தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த இந்த மசாலா பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை உப்பு சரி பார்த்துக் கொள்ளலாம். இறுதியாக 15 பல் வெள்ளை பூண்டுவை மிக்ஸி ஜாரில் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியை ஒரு முறை அடித்து இறக்கினால் சுவையான நல்ல காரம் பொடி தயார்.
இந்த பொடி சூடான சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் நல்ல பொருத்தமாக இருக்கும். சூடான சாதத்தில் இரண்டு தேக்கரண்டி நல்ல காரம் பொடி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடும் பொழுது விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ஒருமுறையாவது இந்த நல்ல காரமொழியை நம் வீட்டில் சமைத்து அசத்தலாம்.