பித்தத்தை குறைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் ஒன் பாட் ரைஸ் இதோ!

தென்னிந்திய உணவு முறைகளில் உணவே மருந்தாக பார்க்கப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு நமக்கு ஊட்டச்சத்தை அளிப்பது மட்டுமில்லாமல் சில வியாதிகளுக்கு அருமருந்தாகவும் அமைகிறது. அந்த வகையில் பித்தம், பசியின்மை, உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றிற்கு புதினா நல்ல மருந்தாக அறியப்படுகிறது. கைப்பிடி அளவு புதினா வைத்து அருமையான ஒன் பாட் புதினா சாதம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் இரண்டு துண்டு பட்டை, மூன்று கிராம்பு, இரண்டு ஏலக்காய், இரண்டு பிரியாணி இலை, , ஒரு அண்ணாச்சி பூ, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதனுடன் கைப்பிடி அளவு முந்திரிப்பருப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். முந்திரிப்பருப்பு பொன்னிறமாக மாறியதும் நீளவாக்கில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வரும் நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய புதினா மற்றும் ஒரு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

புதினா மற்றும் கொத்தமல்லி இலை எண்ணெயோடு சேர்ந்து வதங்கும் நேரத்தில் இரண்டாக கீறிய மூன்று பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். பச்சை மிளகாய் சேர்த்த பிறகு ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

மிதமான தீயில் இவற்றை வதக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரின் ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, மீண்டும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மையாக அரைக்க வேண்டும்.

பெரிதாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் பட்சத்தில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் அரைத்த புதினா மற்றும் கொத்தமல்லி விழுதுகளை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த விழுதுகள் நன்கு எண்ணெயோடு சேர்த்து வதங்கி குக்கரின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வர வேண்டும். இப்பொழுது புதினா தொக்கு தயாராக மாறியுள்ளது. இந்த நேரத்தில் அரைமணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் பாஸ்மதி அரிசி சேர்க்கலாம் அல்லது பொதுவாக நம் வீட்டில் சமைக்கப்படும் அரிசியை இந்த புதினா சாதத்திற்கும் பயன்படுத்தலாம்.

அம்மாவின் அதே கைப்பக்குவத்தில் வீட்டு மசாலாக்களை மட்டுமே பயன்படுத்தி அருமையான மட்டன் குழம்பு ரெசிபி!

அரிசி சேர்த்து நன்கு கலந்த பிறகு கால் தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், கால் தேக்கரண்டி தனியாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக மீண்டும் ஒருமுறை உப்பு சரி பார்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது குக்கரை மூடி விதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். குறைந்தது மூன்று விசில்கள் வந்தால் போதுமானது. பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து பார்த்தால் சுவையான புதினா சாதம் தயார்.
இந்த சாதத்தை பரிமாறுவதற்கு முன்பாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.