அனைத்து வகையான குழம்பு வகைகளுக்கும் ஒரு சூப்பரான சைடு டிஷ் தான் புடலங்காய் முட்டை பொரியல். இது வழக்கமான முட்டை பொரியல் போல் அல்லாமல் கூடுதல் சுவையாக இருக்கும். மேலும் புடலங்காயை பிடிக்காத குழந்தைகள் கூட இந்த புடலங்காய் முட்டை பொரியலை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு இது சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த புடலங்காய் முட்டை பொரியல் செய்வது மிக மிக சுலபம். சில நிமிடங்களில் இந்த முட்டை பொரியலை செய்து விடலாம்.
புடலங்காய் முட்டை பொரியல் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நடுத்தர அளவில் ஒரு புடலங்காயை எடுத்து தோல் சீவி அதில் உள்பகுதியை நீக்கி அதையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புடலங்காயுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து வைத்து விடுங்கள். 5 பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கும் பொழுதே சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வாவ்! முட்டையை வைத்து முட்டை பொரியல் ஒரு முறை வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!
வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதங்கிய பிறகு இதில், நறுக்கி உப்பு சேர்த்து பிசைந்து வைத்திருக்கும் புடலங்காய் சற்று தண்ணீர் விட்டிருக்கும் அந்த தண்ணீரை வடித்து புடலங்காயை மட்டும் இதில் சேர்த்துக் கொள்ளவும். புடலங்காயை நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு மூடி போட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும். புடலங்காய் வெந்த பிறகு இதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி அதையும் நன்கு கிளறி முட்டை வெந்ததும் கொத்தமல்லி தலை தூவி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் முட்டை பொரியல் தயாராகி விட்டது. காரம் கூடுதலாக விரும்புபவர்கள் சிறிதளவு மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.