உளுந்து வைத்து எப்பொழுதும் இட்லி, உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி மட்டும்தான் செய்ய முடியுமா? வாங்க அருமையான புசுபுசு பூரி செய்யலாம்…

உளுந்து வைத்து பூரி ரெசிபியா என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். உளுந்து பூரி ரெசிபி சாதாரணமான பூரியை போல அல்லாமல் சற்று சுவை கூடுதலாகவும் உளுந்தின் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். மேலும் இந்த உளுந்து பூரி உத்தர பிரதேச மாநிலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்க உளுந்து வைத்து புசுபுசு பூரி செய்வதற்கான எளிமையான ரெசிபி பார்க்கலாம்…

ஒரு கப் உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து ஊறவைத்த உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது. கெட்டியான மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் கோதுமை மாவு, அரை கப் ரவை, ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சத்தூள், இரண்டு சிட்டிகை ஓமம், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து முதலில் கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவை கோதுமை மாவுடன் சேர்த்து ஒருசேர பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு தயார் செய்யும் பொழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டுமே பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் இந்த பூரி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக திரட்டி கொள்ள வேண்டும். மிகவும் மெல்லியதாக திரட்டாமல் சற்று தடிமனாக இருக்கும் வகையில் திரட்டி கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் பூரி பொரித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும்.

பூ வைத்து அல்வா செய்ய முடியுமா? ஆமாங்க முருங்கை பூ வைத்து அருமையான அல்வா செய்யலாம். அதற்கான அசத்தல் ரெசிபி இதோ….

எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து நாம் திரட்டி வைத்திருக்கும் பூரியை ஒன்று ஒன்றாக சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொறித்தெடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான உளுந்து பூரி தயார். இந்த பூரிக்கு எப்போதும் போல உருளைக்கிழங்கு மசால் வைத்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பூரியை மைதா போன்ற பொருட்களை வைத்து செய்யாமல் உளுந்து போன்ற சத்து நிறைந்த பொருட்கள் வைத்து செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து எளிதில் கிடைத்து விடுகிறது.