விநாயகருக்கு உகந்த நாளான விநாயகர் சதுர்த்தி இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. முழு முதல் கடவுள் விநாயகரை நம் வீட்டில் வைத்து கொண்டாடும் விதமாக இனிப்பு செய்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு பூரண கொழுக்கட்டை செய்து இந்த முறை வழிபடலாம். இந்த கொழுக்கட்டை ஒன்று சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் விதத்தில் அருமையாக அமைந்திருக்கும். வாங்க இனிமையான மற்றும் கடவுளுக்கு பிடித்த இனிப்பு பூரண கொழுக்கட்டை செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகாலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பத்து முதல் 15 முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.. இந்த நேரத்தில் ஒரு கப் தேங்காய் துருவல் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவல் நெய்யுடன் சேர்ந்து பொன்னிறமாக மாறியதும் ஒரு கப் நாட்டுச்சக்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து தேங்காயுடன் இருக்கும் பொழுது அடுப்பை அணைத்துக் கொள்ளலாம். சர்க்கரை உருண்டையை கையில் பிடித்தால் லட்டு போல பிடிப்பாக இருக்க வேண்டும் இதுதான் அதன் பக்குவம்.
இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மேலே உள்ள மாவு தயார் செய்ய வேண்டும். இதற்காக ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
மீண்டும் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை செய்வதற்கான மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொழுக்கட்டை மாவுடன் நன்கு கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து வர வேண்டும். தண்ணீர் மொத்தமாக சேர்த்து கிளறக் கூடாது.
கை பொறுக்கும் அளவிற்கு சூடு வந்ததும் கையால் மீண்டும் ஒருமுறை பிசைந்து கொழுக்கட்டை அச்சு உள் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளலாம். அதன் உள்பக்கம் நம் தயார் செய்து வைத்திருக்கும் பூரணத்தை உள்ளே வைத்து கொழுக்கட்டை அச்சில் அச்சு பிடிக்க வேண்டும்.
இதற்கு பதிலாக அரிசி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டு வடிவில் பரப்பிக் கொண்டு அதில் நடுவில் பூரணம் வைத்து உருண்டையாகவும் பிடித்துக் கொள்ளலாம். இப்படி அரிசி மாவு முழுவதையும் பூரணம் உள்ளே வைத்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த பூரண உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும். குறைந்தது ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கினார் சுவையான இனிப்பு பூரண கொழுக்கட்டை தயார். பூரண கொழுக்கட்டையை கடவுள் விநாயகருக்கு படைத்து இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி விடலாம்.