விடுமுறை நாட்களில் பாட்டியின் கைப்பக்குவத்தில் சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்காகவே நம்மில் பலர் அங்கு செல்வது வழக்கம். அந்த வகையில் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து அருமையான குழம்பு செய்து அனைவரையும் எளிதில் திருப்தி படித்து விடுவார்கள். அஞ்சரை பட்டியில் உள்ள மருந்து போதும் தனியாக ஏதும் மருந்து தேவை இல்லை என சொல்லும் அளவிற்கு பல மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளைப்பூண்டு வைத்து அருமையான வறுத்து அரைத்த பூண்டு குழம்பு செய்யலாம் வாங்க. இந்த குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த பூண்டு குழம்பு செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம்.. அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் கைப்பிடி அளவு கருவேப்பிலை, துருவிய தேங்காய் ஒரு கப், காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து வத்தல் சேர்த்து மீண்டும் வருத்துக்கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்ததாக அதை கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம், இரண்டு கைப்பிடி அளவு வெள்ளை பூண்டு, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளைப்பூண்டு பாதியாக வதங்கியதும் ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்து கொள்ளலாம்.
இதனுடன் கூடுதலாக ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சற்று கூடுதலாக புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளலாம்.
விலையில் மட்டுமல்ல சுவையிலும் உயர்வான பாதாம் வைத்து அருமையான அல்வா செய்யலாம் வாங்க!
நாம் இந்த குழம்பு செய்யும் பொழுது தக்காளி பயன்படுத்தவில்லை என்ற காரணத்தினால் புளிக்கரைசல் கூடுதலாக சேர்த்தால் சுவை சிறப்பாக இருக்கும். இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொடுத்து குழம்பை மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
10 முதல் 15 நிமிடம் வரை கொதித்தால் போதுமானது. கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால்இப்பொழுது பூண்டு குழம்பு தயார். இந்த குழம்பு சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுதும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். மேலும் இந்த குழம்பை ஒரு வாரத்திற்கு வைத்து சாப்பிடலாம். சாதம்,இட்லி, தோசையை விட பழைய சாதத்திற்கு இந்த குழம்பு சரியான பொருத்தமாக இருக்கும்.